திகார் சிறையில் ப.சிதம்பரம்; கார்த்தி சிதம்பரத்தின் உருக்கமான பிறந்தநாள் கடிதம்

செய்திகள்
Updated Sep 16, 2019 | 16:54 IST | Times Now

சிறையில் இருக்கும் தந்தைக்கு உலக நடப்புகளை தெரிவிக்கும் வகையில் கடிதம் எழுதியுள்ள கார்த்தி சிதம்பரம் வஞ்சப்புகழ்ச்சியாக பாஜகவை விமர்சிக்க தவறவில்லை.

Karthi writes to father P Chidambaram on birthday, ப. சிதம்பரத்திற்கு மகன் கார்த்தி பிறந்தநாள் மடல்
ப. சிதம்பரத்திற்கு மகன் கார்த்தி பிறந்தநாள் மடல்  |  Photo Credit: Twitter

புது டெல்லி: திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் பிறந்தநாளை ஒட்டி அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருக்கும் தந்தைக்கு உலக நடப்புகளை தெரிவிக்கும் வகையில் கடிதம் எழுதியுள்ள கார்த்தி சிதம்பரம், வஞ்சப்புகழ்ச்சியாக பாஜகவை விமர்சிக்கவும் தவறவில்லை. அக்கடிதத்தில் அவர் கூறியதன் முக்கிய குறிப்புகள் இதோ: ”உங்களுக்கு இன்று 74-வது பிறந்தநாள். தாங்கள் விமரிசையான கொண்டாட்டங்களை  விரும்பாவிட்டாலும் நம் நாட்டில் தற்போது சிறிய விஷயங்களுக்கெல்லாம் பெரிய கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.

சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் நிலவில் தரையிறங்கும் காட்சியை பெருமையுடன் நேரலையில் கண்டோம். லேண்டருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதை தொடர்ந்து கன்னியாகுமரி தமிழனான இஸ்ரோ சிவன் சோர்வடைந்தார். பிரதமர் மோடி அவரை கட்டித்தழுவி தேற்றினார். தனது ’பக்தர்கள்’ நம்புவது போல இந்தியாவின் விண்வெளி திட்டம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்படவில்லை, இஸ்ரோ விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது என மோடி நம்புவதாகவே கருதுகிறேன். புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தது நியூட்டன் என்பதை மறந்து ஐன்ஸ்டீன் என சென்ற வாரம் பியுஷ் கோயல் கூறினார். ’பக்தர்கள்’ அதையும் நம்ப வாய்ப்புண்டு.

100 நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பை தாங்கள் தவறவிட்டீர்கள். தாங்கள் கூறியது போல 6 ஆண்டுகளில் இல்லாத அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதம் குறைந்ததை கொண்டாடினார்கள். 10 மாதங்களில் இல்லாத அளவு வாகன விற்பனை குறைந்துள்ளது மிகப்பெரிய சாதனை தான். சென்செக்ஸ் 2019-ன் அதிகபட்ச வீழ்ச்சியை சென்ற வாரம் அடைந்ததற்கு தம்மை தாமே பாராட்டிக்கொண்டனர். வாடகை வாகன செயலிகளால் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் சொன்னதை நீங்கள் வெகுவாக பாராட்டியிருப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

 

 

காஷ்மீருக்கு நல்ல செய்தி! அங்குள்ள விவசாயிகளிடம் இருந்து நேரடியாக ஆப்பிள்களை கொள்முதல் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 40 நாட்களாக காஷ்மீர் மக்களின் சுதந்திரத்தை அபகரித்துள்ள அரசாங்கம், தற்போது ஆப்பிள் பழங்களுக்கு சுதந்திரம் வழங்கியுள்ளது. காஷ்மீரின் துயரத்தை தங்களை விட சரியாக யாராலும் புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில், காஷ்மீரைப் போல தாங்களும் அநியாயமாக சிறைவக்கப்பட்டு இருக்கிறீர்கள்.” இவ்வாறு கார்த்தி சிதம்பரம் தனது கடிதத்தில் கூறிப்பிட்டுள்ளார்.

NEXT STORY