ஆளுநர் விதித்த கெடு முடிவடைந்தது! பரபரப்பில் கர்நாடக சட்டப்பேரவை

செய்திகள்
Updated Jul 19, 2019 | 18:13 IST | Times Now

கர்நாடக சட்டப்பேரவையில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி ஆளுநர் விதித்த கெடு மாலை 6 மணியுடன் முடிவடைந்ததது.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அவசரமில்லை:முதலமைச்சர் குமாரசாமி
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அவசரமில்லை:முதலமைச்சர் குமாரசாமி  |  Photo Credit: PTI

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் முதலமைச்சர் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு இன்று மதியம் 1.30 மணி வரை ஆளுநர் விடுத்த காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில், இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என முதலமைச்சர் குமாரசாமிக்கு ஆளுநர் வஜூபாய் வாலா மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளார். 

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்தவேண்டும் என பாரதிய ஜனதா கட்சியினர் நேற்று வலியுறுத்தினர். நம்பிக்கை வாக்கெடுப்பை எப்போது நடத்த வேண்டும் என நான் தான் முடிவு செய்வேன் என சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ் குமார் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, நடந்த விவாத்தில் ஏற்பட்ட அமளியை அடுத்து, சட்டப்பேரவை சபாநாயகர் ஒத்திவைத்தார். இதனையடுத்து, சபாநாயகர் ஒருதலை பட்சமாக நடந்துகொள்வதாக பாரதிய ஜனதா குற்றம்சாட்டியது.

பாரதிய ஜனதா கட்சி சட்டப்பேரவைக்குழுத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடியூரப்பா மற்றும் பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் நேற்றிரவு கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் படுத்து உறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியவுடன் பேசிய சபாநாயகர் கே.ஆர்.ரமேஷ் குமார், சட்டப்பேரவையை பாரபட்சமின்றி தான் நடத்துவதாகவும், அதற்கான தைரியம் தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்தார். 

இதனைத்தொடர்ந்து, பேரவையில் பேசிய முதலமைச்சர் குமாரசாமி,  நம்பிக்கை வாக்கெடுப்பின்மீதான விவாதத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் எனத் தெரிவித்தார். அரசை காப்பாற்றுவதற்காக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய மாட்டேன் எனத் தெரிவித்த அவர், நீங்கள் தற்போதும் அரசை அமைக்கலாம் என்றும், அவரசம் ஒன்றும் இல்லை என்றும் தெரிவித்தார். திங்கட்கிழமை அல்லது செவ்வாய் கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தலாம், அதிகாரத்தை தவறாக பயன்படுத்த மாட்டேன் எனத் தெரிவித்தார்.

அதிருப்தி எம்.எல்.ஏக்களை கடுமையாக தாக்கிப் பேசிய குமாரசாமி, இதுபோன்றவர்களின் ஆதரவைப் பெற்று எத்தனை நாட்கள் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடத்தப்போகிறது என்பதை தான் பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்தார். 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...