இன்று பிற்பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபியுங்கள்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம்

செய்திகள்
Updated Jul 19, 2019 | 00:13 IST | Times Now

கர்நாடக சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டநிலையில், முதல்வர் குமாரசாமிக்கு அம்மாநில ஆளுநர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

Karnataka Assembly, கர்நாடக சட்டப்பேரவை
கர்நாடக சட்டப்பேரவை  |  Photo Credit: ANI

பெங்களூர்: கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மதியம் 1.30 மணிக்குள் முதல்வர் குமாராசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் வஜூபாய் வாலா கடிதம் அனுப்பியுள்ளார்.

காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததை அடுத்து கர்நாடக அரசியலில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது.  இதற்கிடையில் கர்நாடக சட்டப்பேரவை நேற்று காலை கூடியது.  முதல்வர் குமாரசாமி தமது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார்.

அப்போது,  அரசை கவிழ்க்க பாஜகவினர் முயற்சி செய்து வருவதாக கூறினார். உச்சநீதிமன்ற தீர்ப்பு அரசியல் அமைப்புக்கு எதிராக இருப்பதால் விளக்கம் பெறும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பை ஒத்திவைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும் தங்களது எம்.எல்.ஏ.க்களை பாஜகவினர் கடத்தி விட்டதாக அமைச்சர் டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டினார். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.  

இதையடுத்து சபாநாயகர் வேண்டுமென்றே தாமதம் செய்வதாக கூறி பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் புகார் அளித்தனர். கர்நாடக ஆளுநரும் நம்பிக்கை வாக்கெடுப்பை நேற்றே நடத்துமாறு அறிவுறுத்தியிருந்தார். காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவையை இன்று காலை 11 மணி வரை சபாநாயகர் ரமேஷ்குமார் ஒத்திவைத்தார்.

 

 

இந்நிலையில் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான எடியூரப்பா, பாஜக எம்எல்ஏக்களுடன் சட்டப்பேரவையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும் வரை சட்டப்பேரவையில் இருந்து செல்ல மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பரபரப்பான சூழலில் கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா முதல்வர் குமாரசாமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் குமாரசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனால் கர்நாடக அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...