அடுத்தடுத்த திருப்பம்... கர்நாடக அமைச்சரவை இன்று காலை அவசரமாக கூடுகிறது

செய்திகள்
Updated Jul 11, 2019 | 08:53 IST | Times Now

கர்நாடகாவில் அடுத்தடுத்து எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து வரும் சூழலில் இன்று காலை முதல்வர் குமாரசாமி அமைச்சரவையை கூட்டியுள்ளார்.

karnataka cm Kumaraswamy
karnataka cm Kumaraswamy  |  Photo Credit: Times Now

பெங்களூர்: முதல்வர் குமாரசாமி தலைமையில் இன்று காலை கர்நாடக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. 

கர்நாடக அரசியலில் நிலவி வரும் பதட்டமான சூழலால் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி இடையே சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 14 அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் கொடு்த்துள்ள நிலையில் நேற்று மேலும் இரண்டு எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் ரமேஷ்குமாரை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். 

ராஜினாமா கடிதம் அளித்த காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 14 எம்.எல்.ஏக்கள் மும்பையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளனர். இதுவரை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 13 எம்.எல்.ஏக்கள், மதச்சார்பற்ற ஜனதாளம் கட்சியை சேர்ந்த 3 பேரும் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். இதனால் குமாரசாமியின் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

எனினும் எம்.எல்.ஏக்களிடம் பேசி சமாதானம் செய்து ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் கர்நாடக அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவகுமார் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்காக எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கு சென்று காத்திருந்தார். ஆனால், எம்.எல்.ஏக்கள் யாரும் அவரை சந்திக்க விரும்பவில்லை எனத் தெரிவித்துவிட்டனர்.

இதனையடுத்து டி.கே.சிவகுமார் மற்றும் மும்பை காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோரா ஆகியோர் ஹோட்டலுக்கு வெளியே காத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சிலர் தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு மும்பை காவல்துறையினருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதனையடுத்து மும்பை காவல்துறையினர் டி.கே சிவக்குமார் உள்ளிட்டவர்களை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கர்நாடக அரசியலில் குழப்பம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று காலை 11 மணிக்கு முதல்வர் குமாரசாமி அமைச்சரவையை கூட்டியுள்ளார். இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கபடலாம் என கூறப்படுகிறது. இதையொட்டி கர்நாடக சட்டசபை அமைந்துள்ள விதான் சவுதாவை சுற்றி 2 கிலோ மீட்டருக்கு காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலையால் ஜூலை 14 வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

NEXT STORY
அடுத்தடுத்த திருப்பம்... கர்நாடக அமைச்சரவை இன்று காலை அவசரமாக கூடுகிறது Description: கர்நாடகாவில் அடுத்தடுத்து எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து வரும் சூழலில் இன்று காலை முதல்வர் குமாரசாமி அமைச்சரவையை கூட்டியுள்ளார்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola