டெல்லி ஜே.என்.யூ மாணவர்களின் தொடர் போராட்டத்தால் உயர்த்திய விடுதி கட்டணத்தை திரும்பப் பெறுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் மாணவர்கள் மற்ற கட்டண உயர்வையும் திரும்பப் பெற வேண்டும் என்று இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டணம், கல்விக் கட்டணம், சேவைக் கட்டணம் சுமார் 300% உயர்த்தப்பட்டது. இதனால் கல்லூரி மாணவர்கள் மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுத்து 20 நாட்களுக்கும் மேலாக நடத்தி வருகிறார்கள்.
திங்கட்கிழமை மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாணவர்கள் மீது தண்ணீர் பாய்ச்சியும் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியும் போலீசார் பல விதமான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்கள். இருப்பினும் மாணவர்கள் தொடந்து போராடி வந்தனர். இந்நிலையில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கல்வித்துறை செயலாளர் சுப்ரமணியம் தனது ட்விட்டர் பக்கத்தில், விடுதி கட்டண உயர்வு திரும்பப் பெறுவதாகக் கூறியுள்ளார். இருப்பினும் மற்ற கட்டண உயர்வு திரும்பபெறாததால் 20ஆம் நாளான இன்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.