ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா? சிபிஐ கோர்ட்டில் அனல் பறந்த வாதம்

செய்திகள்
Updated Aug 22, 2019 | 18:17 IST

5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கோரும் சிபிஐ தரப்பு மனு மீதான தீர்ப்பை டெல்லி சிபிஐ நீதிமன்றம் அரை மணிநேரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

P Chidambaram, ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்  |  Photo Credit: AP

டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டார்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கிய ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரத்தை சிபிஐ நேற்றிரவு கைது செய்தது. சிபிஐ தலைமை அலுவலகத்தில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவரிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது சிபிஐ தரப்பில் துஷார் மேத்தா பல முக்கிய வாதங்களை முன்வைத்தார். அதாவது, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பான விசாரணைக்கு சிதம்பரம் போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. எந்த கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை. அமைதியாக இருப்பது அவரது உரிமை. ஆனால், முக்கியமான கேள்விகளை தவிர்ப்பது ஒத்துழையாமை தான் என குற்றம் சாட்டினார். மேலும். ஐஎன்எக்ஸ் வழக்கின் குற்றப்பத்திரிகையில் ப.சிதம்பரத்தின் பெயரை சேர்க்க நடவடிக்கு எடுக்கப்பட்டு வருகிறது. ஆவணங்களின் அடிப்படையில் சிதம்பரத்திடமும், மற்றவர்களிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. 

 

 

எனவே, ப.சிதம்பரத்தை 5-நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு தாக்கல் செய்ய உள்ளது. சிதம்பரத்துக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் சிபிஐ தரப்பு வாதத்தை முன் வைத்தது. இந்த வழக்கு தொடர்பான கூட்டு சதியில் ப.சிதம்பரத்திற்கு முக்கிய பங்கு உண்டு என சிபிஐ தரப்பு கூறியது.

இதையடுத்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் சிதம்பரம் சார்பாக வாதங்களை முன்வைத்தாா். அப்போது, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஏற்கெனவே கேட்ட கேள்விகள் மட்டுமே சிதம்பரத்திடம் மீண்டும் கேட்டுள்ளனர். நேற்று உறங்க வேண்டும் எனக் கேட்டபோதும் கூட 24 மணி நேரமாக அவரை தூங்கவிடவில்லை. சம்மன் வழங்கப்பட்டபோதெல்லாம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை முன்பு சிதம்பரம் ஆஜராகியுள்ளார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 அரசுத் துறை அதிகாரிகள் தற்போது வரை கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லாமல் எப்படி கைது செய்யலாம் எனவும் கபில் சிபில் கேள்வி எழுப்பினார்.

சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் சிதம்பரம் தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது. சுமார் ஒன்றரை நேரமாக இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கோரும் சிபிஐ தரப்பு மனு மீதான தீர்ப்பை அரை மணிநேரத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...