ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் பலியாகினா்
காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தான் தொடா்ந்து அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்திய ராணுவமும் பதிலுக்கு தாக்குதல் நடத்தி வருகின்றனா். இன்று காலையும் ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டம், தங்கார் செக்டார் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது.
இந்த தாக்குதலில் 2 இந்திய வீரர்கள் பொது மக்களில் ஒருவரும் உயிரிழந்தனர். மேலும், அந்த பகுதியில் இருந்த வீடு மற்றும் அரிசி குடோன் ஒன்றும் முற்றிலும் சேதமடைந்தன. இரண்டு பசு மாடு, 19 ஆடுகள் உள்பட கால்நடைகளும் இந்த தாக்குதலில் பலியாகின.
இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுக்கும் விதமாக, எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அப்பகுதியில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 5 வீரர்கள் பலியாகினர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தளபதி பிபின் ராவத்திடம் எல்லைப் பகுதியில் நிலவி வரும் சூழல் குறித்து கேட்டறிந்தாா்.