இந்தியர் உள்ளிட்ட மூவருக்கு பொருளாதாரத்தில் நோபல் பரிசு அறிவிப்பு

செய்திகள்
Updated Oct 14, 2019 | 16:45 IST | Times Now

இவர்களது வழிகாட்டுதலில் படி பள்ளிகளில் கொடுக்கப்பட்ட சிறப்பு பயிற்சியால் இந்தியாவில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பலனடைந்துள்ளனர்.

Nobel Prize in Economic Sciences 2019, பொருளாதாரத்தில் நோபல் பரிசு 2019
பொருளாதாரத்தில் நோபல் பரிசு 2019  |  Photo Credit: Twitter

ஸ்வீடன்: ஒரு இந்தியர் உட்பட மூன்று பேருக்கு இந்த ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் வறுமையை குறைக்க புதிய அணுமுறைகளை கையாண்டதற்காக அபிஜித் பானர்ஜீ அவரது மனைவி எஸ்தர் டூஃப்லோ மற்றும் அவர்களோடு இணைந்து பணியாற்றிய மைக்கேல் கிரேமர் ஆகியோருக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இம்மூவரும் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் வறுமையை ஒழிக்க பயன்படுவதாக நோபல் பரிசு வழங்கும் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சைன்சஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 1990-களில் மைக்கேல் கிரேமர் மற்றும் குழுவினர், மேற்கு கென்யாவில் பள்ளி தேர்ச்சி விகிதங்களை அதிகரிக்க கள பரிசோதனைகள் மேற்கொண்டனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபிஜித் பானர்ஜீ மற்றும் அவரது மனைவி எஸ்தர் டூஃப்லோ ஆகியோரும் பல வேளைகளில் மைக்கேல் கிரேமருடன் இணைந்து இதே போன்ற ஆராய்ச்சிகளை பிற நாடுகளில் மேற்கொண்டனர். இவர்கள் உருவாக்கிய புதிய ஆராய்ச்சி முறைகள் பொருளாதாரத் துறையில் இன்று பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன.

இவர்களது வழிகாட்டுதலில் படி பள்ளிகளில் கொடுக்கப்பட்ட சிறப்பு பயிற்சியால் இந்தியாவில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பலனடைந்துள்ளனர். இவர்களது ஆலோசனையின் படி பல நாடுகளில் தடுப்பு மருத்துவம் (preventive healthcare) மீது அதிகப்படியான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

 

 

உலகில் 70 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வருமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 வயதிற்கும் குறைவாக உள்ள சுமார் 50 லட்சம் குழந்தைகள் ஆண்டுதோறும் நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கின்றனர். போதியளவு சரியான மருத்துவ வசதிகள் இருந்திருந்தால் இவர்களது உயிர் காப்பாற்றப்பட்டிருக்கக் கூடும். உலகில் பாதியளவு குழந்தைகள் அடிப்படை கல்வியறிவு பெறும் முன்னரே பள்ளிப் படிப்பை நிறுத்திவிடுகின்றனர். இந்நிலையில், அபிஜித் பானர்ஜீ, எஸ்தர் டூஃப்லோ மற்றும் மைக்கேல் கிரேமர் ஆகியோரின் ஆராய்ச்சிகள் மேலும் பலரது வாழ்வை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டதாகக் கருதப்படுகிறது.

NEXT STORY