கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் ஐ.டி. ரெய்டு: ரூ.33 கோடி பறிமுதல் !

செய்திகள்
Updated Oct 16, 2019 | 21:04 IST | Times Now

வருமான வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள கல்கி பகவான் ஆசிரமத்தில் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறாா்கள்.

Kalki Bhagavan with his wife
கல்கி பகவான் மற்றும் அவரது மனைவி   |  Photo Credit: YouTube

சென்னை: நாடு முழுவதும் உள்ள கல்கி பகவான் ஆசிரமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ. 33 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டத்தில் கல்கி பகவானுக்கு சொந்தமாக ஆசிரமம் உள்ளது. கல்கி பகவானும் அவரது மனைவி புஜ்ஜம்மாவும் ஆன்மீக சொற்பொழிவுகள் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனா். இருவரையும் தரிசனம் செய்ய நுழைவுக் கட்டணமாக ரூ. 5000 வசூலிக்கப்படுவதாகவும், பாத பூஜைக்கு பல ஆயிரக்கணக்கான ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், கல்கி பகவானுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனா்.  4 குழுக்களாக பிரிந்து சென்ற அதிகாரிகள், ஆசிரமம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னையில் உள்ள அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், கோவர்த்தனபுரத்தில் உள்ள கல்கியின் மகன் கிருஷ்ணனுக்கு சொந்தமான அலுவலகத்திலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில் இதுவரை கணக்கில் வராத இந்திய ரூபாய் 24 கோடியும், வெளிநாட்டு கரன்சி 9 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வருமான வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கல்கி பகவானுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள ஆசிரமத்தில் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறாா்கள். 

NEXT STORY