இலங்கையில் தாக்குதலில் 7 தற்கொலைப் படை தீவிரவாதிகள் ஈடுபட்டதாகத் தகவல்!

செய்திகள்
Updated Apr 22, 2019 | 15:51 IST | Times Now

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 290 பேர் பலியாகினர். இலங்கையில் தாக்குதலில் 7 தற்கொலைப் படை தீவிரவாதிகள் ஈடுபட்டதாகத் தகவல்

குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் போலீசார் குவிப்பு
குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் போலீசார் குவிப்பு  |  Photo Credit: AP

கொழும்பு; இலங்கையில் நடைபெற்ற தொடர் வெடிகுண்டு சம்பவங்களில் 290 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், கொழும்பு விமான நிலையத்தின் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்றை இலங்கை விமானப் படையினர் கண்டெடுத்து, செயல் இழக்கச் செய்துள்ளனர். தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு சம்பவங்கள் தொடர்பாக 24 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் உள்நாட்டுப் போர் கடந்த 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தபின்னர் நடைபெற்ற மிகப்பெரும் தாக்குதல் சம்பவமாக நேற்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்தனையின்போது தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் 10க்கும் மேற்பட்டோர் உள்பட 290 பேர் உயிரிழந்துள்ளனர். 

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட 8 தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில், இரண்டு தற்கொலைப் படை தாக்குதல் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து விடுக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று அதிகாலை திரும்பப் பெறப்பட்டுள்ளது. 

கொழும்பு விமான நிலையம் அருகே கண்டெடுக்கப்பட்டது பைப் வெடிகுண்டு என இலங்கை விமானப்படை செய்தித்தொடர்பாளர் கிஹன் செனிவர்த்தனே தெரிவித்துள்ளார். தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களால், விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இலங்கை ஏர்லைன்ஸ், பயணிகள் அனைவரும் 4 மணிநேரத்திற்கு முன்னர் பாதுகாப்பு சோதனைகளுக்காக வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களில் இந்தியர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக 24 பேரை இலங்கை போலீசார் கைது செய்துள்ளதாகவும், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஒரே அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை தலைநகர் கொழும்பு சென்றிருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த குழுவினரில் 2 பேர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. மேலும் 5 பேர் குறித்த தகவல் இதுவரை வெளியாக வில்லை. மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த 7 பேரும் குண்டுவெடிப்பு நிகழ்ந்த சங்க்ரி- லா ஹோட்டலில் தங்கியிருந்தனர்.

மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த கே.ஜி. ஹனுமந்தரயப்பா மற்றும் எம்.ரெங்கப்பா ஆகிய இருவர் குண்டுவெடிப்பில் சிக்கி உயிரிழந்ததை வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த செய்தி தனக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக குமாரசாமி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் 7 தற்கொலைப் படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக இலங்கை அரசின் தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

 

 

 

NEXT STORY
இலங்கையில் தாக்குதலில் 7 தற்கொலைப் படை தீவிரவாதிகள் ஈடுபட்டதாகத் தகவல்! Description: இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 290 பேர் பலியாகினர். இலங்கையில் தாக்குதலில் 7 தற்கொலைப் படை தீவிரவாதிகள் ஈடுபட்டதாகத் தகவல்
Loading...
Loading...
Loading...