முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குமாரசாமி

செய்திகள்
Updated Jul 23, 2019 | 21:35 IST

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததை அடுத்து கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை நேரில் சந்தித்து தனது ராஜினமா கடிதத்தை வழங்கினார் குமாரசாமி.

Kumaraswamy's resignation
Kumaraswamy's resignation  |  Photo Credit: PTI

பெங்களூர்: நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி தோல்வி அடைந்த நிலையில் குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும் 104 இடங்களில் வெற்றி பெற்றிருந்த பாஜக ஆட்சியமைத்தது. எடியூரப்பா மீண்டும் முதல்வரானார். ஆனால், சட்டப்பேரவையில் அப்போது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் 6 நாட்களில் ராஜினாமா செய்தார். இதையடுத்து காங்கிரஸ் - மஜத கூட்டணி மூலம் குமாரசாமி முதல்வராக பதவியேற்றார். இதனால் சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருந்தனர். 

பாஜகவும் இந்த கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியது. அதன் விளைவாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 13 பேரும், மஜத எம்.எல்.ஏக்கள் 3 பேரும் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். சுயேட்சை எம்.எல்.ஏக்கள் இரண்டு பேர் குமாரசாமி அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை திரும்ப பெற்றனர். இதனால் கர்நாடக அரசியலில் குழப்பம் ஏற்பட்டது. இதற்கிடையில் அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது.

 Kumaraswamy submits his resignation to Karnataka Governorவேறு வழியில்லாமல் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பை ஜூலை 18-ஆம் தேதி முதல்வர் குமாரசாமி கொண்டு வந்தார். 4 நாட்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில் இன்று இரவு 7.15 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் குமாரசாமி அரசுக்கு எதிராக 105 உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஆதரவாக 99 வாக்குகள் கிடைத்தன. இதனால் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்தது.

Governor, Vajubhai Vala accepts HD Kumaraswamy's resignation

நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி தோல்வி அடைந்ததையடுத்து குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநர் வஜூபாய் வாலாவை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதனை ஆளுநர் வஜூபாய் வாலா ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து எடியூரப்பா ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...