பிரதமர் நரேந்திர மோடி உடன் ஜி.கே.வாசன் சந்திப்பு

செய்திகள்
Updated Nov 06, 2019 | 13:00 IST | Times Now

20 நிமிடங்கள் நடைபெற்ற சந்திப்புல் தமிழக அரசியல் சூழல் குறித்து பிரதமருடன் ஜி.கே.வாசன் ஆலோசித்தார்.

GK Vasan, Narendra Modi, ஜி.கே.வாசன், நரேந்திர மோடி
ஜி.கே.வாசன், நரேந்திர மோடி | Photo Credit: IANS, Twitter 

புது டெல்லி: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பிரதமர் நரேந்திர மோடியை புது டெல்லியில் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். 

சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது, “நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் முக்கிய கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் இடம்பெற்றது. அகில இந்திய அளவில் பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்று நாட்டை மிகச் சிறப்பாக வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார். கூட்டணி கட்சி தலைவர் என்கிற முறையில் இன்று முதல் முறையாக பிரதமரை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து 20 நிமிடங்கள் பேசினேன்.

இது மிகுந்த மரியாதை நிமித்தமான சந்திப்பு. இருந்தாலும் கூட, தமிழகத்தில் துறை சார்ந்த, வளர்ச்சிக்கான பிரச்சனைகள் குறித்து பிரதமிரடம் விவரமாக, தெளிவாக எடுத்துக் கூறினேன். குறிப்பாக கல்வி, விவசாயம், தொழில், வேலைவாய்ப்பு, தமிழுக்கான முக்கியத்துவம், இவைகளை பற்றி பிரதமரிடம் எடுத்துக் கூறினேன். பாரத பிரதமர் நான் கூறிய கருத்துகளை கூர்மையாக கேட்டு தெரிந்துகொண்டார். அவ்வப்போது சில சந்தேகங்களை கேட்டார். அதற்கு நான் விளக்கமளித்தேன்.

மேலும், மிக முக்கியமாக, தமிழகத்தில் ஆண்டுகொண்டிருக்கிற அதிமுகவின் ஆட்சியாளர்கள் மக்கள் எண்ணங்களை பிரதிபலிக்கக்கூடிய திட்டங்களை கொடுத்து, மத்திய அரசின் திட்டங்களையும் மக்களிடம் சிறப்பாக கொண்டு சேர்ப்பதாகக் கூறினேன். நான் அவரிடம் எடுத்துக்கூறிய தமிழகத்தின் துறைசார்ந்த பிரச்சனைகளுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதனை பரிசீலனை செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டேன்.

தமிழக அரசியல் சூழல் குறித்த எனது கருத்துகளையும், கணிப்புகளையும் பிரதமிடம் சொன்னேன். தமிழக அரசியல் சூழலை பொறுத்தவரையில் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் மனதில் இருந்த எண்ண ஓட்டம் மாறியிருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டு சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தல். இதனால் வரும் காலங்களில் எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக பிரதமரிடம் கூறினேன். மத்திய, மாநில அரசுகள் மீதும் அதனை சார்ந்த கூட்டணிகள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையிலேயே இடைத்தேர்தல் வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதை தெரிவித்தேன்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை சந்திக்க விரும்புகிறேன். இருப்பினும் இம்முறை நான் அதற்கு நேரம் கேட்கப்போவது கிடையாது. மகாராஷ்டிரா அரசியல் சூழலில் அவரது பங்கு முக்கியத்துவம் வகிக்கிறது என்பதால், சாவகாசமாக அவரை பின்னர் சந்திப்பேன். அவரை சந்திப்பதற்கான எந்த அவசரமும் எனக்கு கிடையாது.” இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை பாஜகவுடன் இணைப்பது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, தமாகா தனித்தன்மையுடன் சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஜி.கே.வாசன் பதிலளித்தார். மேலும், பிரதமருடனான சந்திப்பின் போது மூன்றாம் நபர் யாரும் இல்லை என்று கூறிய ஜி.கே.வாசன், சந்திப்பு குறித்து வேறேதும் செய்தி வந்தால் அது தவறானது என்றும் கூறினார்.

NEXT STORY