புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தது ஐன்ஸ்டீனா? பியூஸ் கோயலை கலாய்க்கும் நெட்டிசன்கள்

செய்திகள்
Updated Sep 12, 2019 | 18:17 IST | Times Now

புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தது சர் ஐசாக் நியூட்டன் தான் என்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அல்ல என்றும் இணையவாசிகள் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை கிண்டல் செய்து வருகின்றனர்.

Piyush Goyal, பியூஸ் கோயல்
பியூஸ் கோயல் 

புது டெல்லி: புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் என்று புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல். மேலும், அதனை கண்டுபிடிக்க அவருக்கு கணிதம் தேவைப்படவில்லை என்றும் கூறியுள்ளார். பொருளாதார மந்தநிலை குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் போது, மக்கள் கணிதம் சார்ந்த விஷயங்களுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, ஓலா மற்றும் ஊபர் வாடகைக் கார் சேவைகள் பிரபலமடைந்ததால் வாகன உற்பத்தித்துறை பாதிக்கப்பட்டிருப்பதாக பேசி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்ச்சையை கிளப்பினார். இக்கருத்தை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வந்தனர். அந்த அலை ஓய்வதற்குள் தற்போது பியூஷ் கோயல் தெரிவித்துள்ள கருத்து விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேசியதாவது: “தொலைக்காட்சிகளில் வரும் கணக்குகளை பார்த்து குழப்பம் அடையாதீர்கள். நாடு 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் ஆக வேண்டும் என்றால் தற்போது இருக்கும் 6-7% சதவீத வளர்ச்சி விகிதம் போதாது என்றும், 12 சதவீதத்தில் வளர வேண்டும் என்றும் தொலைக்காட்சிகளில் கூறுகின்றனர். அதனை யாரும் நம்ப வேண்டாம். கணிதத்தை பயன்படுத்தி ஐன்ஸ்டீன் புவியீர்ப்பு விசையை கண்டுபிடிக்கவில்லை. ஏற்கனவே இருந்த நடைமுறையின் படி அவர் சிந்தித்திருந்தால் உலகில் புதிய கண்டுபிடிப்புகள் எதுவும் தோன்றியிருக்காது.” இவ்வாறு அவர் பேசினார்.

புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தது சர் ஐசாக் நியூட்டன் தான் என்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அல்ல என்றும் இணையவாசிகள் பியூஸ் கோயலை கிண்டல் செய்து வருகின்றனர். 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...