ப.சிதம்பரத்தை விசாரிக்கும் அமலாக்கத்துறை; தேவைப்பட்டால் கைது செய்யவும் அனுமதி

செய்திகள்
Updated Oct 15, 2019 | 18:37 IST | Times Now

விசாரணையை தொடந்து தேவைப்பட்டால் ப.சிதம்பரத்தை கைது செய்யவும் அமலாக்கத்துறைக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

P Chidambaram, ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்  |  Photo Credit: BCCL

புது டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தவும், தேவைப்படும் பட்சத்தில் அவரை கைது செய்யவும் அமலாக்கத்துறைக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அக்டோபர் 17-ஆம் தேதி நீதிமன்ற காவல் நிறைவடையும் நிலையில், அமலாக்கத்துறை விசாரணை நடத்த உள்ளதால் ப.சிதம்பரத்தின் காவல் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்தில் ப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியது. ஆனால், பொதுமக்கள் வந்துபோகும் இடத்தில் விசாரணை நடத்துவது கண்ணியக் குறைவாக இருக்கும் எனக் கூறி நீதிபதி மறுத்துவிட்டார்.

முன்னதாக, சர்வதேச பணப்பறிமாற்றம் தொடர்பாக ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தை நாடியது. காவல் கெடு ஏற்கனவே முடிந்துவிட்டதாகவும், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஒரே விவகாரத்தை தான் விசாரிப்பதாகவும் நேற்றைய விசாரணையின் போது ப.சிதம்பரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

இன்றைய விசாரணையில், திகார் சிறைக்கு சென்று ப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையை தொடந்து தேவைப்பட்டால் அவரை கைது செய்யவும் அமலாக்கத்துறைக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்டு 21-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், செப்டம்பர் 5- ஆம் தேதி முதல் திகார் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். அக்டோபர் 17 வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது அமலாக்கத்துறை விசாரணைக்காக ப.சிதம்பரம் காவலில் எடுத்துக் கொள்ளப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...