யோகி ஆதித்யநாத், மாயாவதி பிரசாரம் செய்ய தடை: தேர்தல் ஆணையம் அதிரடி

செய்திகள்
Updated Apr 15, 2019 | 17:11 IST | Times Now

மத உணர்வுகளை தூண்டி பேசும் அரசியவாதிகளின் வெறுப்பு பேச்சுக்களை கண்டு கொள்ளாமல் தூங்கி கொண்டிருக்கின்றீர்களா? என தேர்தல் ஆணையத்தை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.

Uttar Pradesh CM Yogi Adityanath and BSP chief Mayawati , உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி  |  Photo Credit: Twitter

டெல்லி: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதால், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோர் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. 

17-வது மக்களவைத் தேர்தல் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. முதல் கட்டமாக 91 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலையொட்டி பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே கடந்த 7-ம் சகரன்பூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய மாயாவதி, முஸ்லீம் சமுதாயத்தினருக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.  உங்கள் வாக்குகளை உறவினர் என்பதாலோ, நண்பர்கள் என்பதாலோ பதிவிடக்கூடாது. உத்தரப்பிரதேசத்தில் பாஜகவை தோல்வியடையச் செய்ய வேண்டும் என்றால், முஸ்லீம்களின் வாக்குகள் சிதறாமல் தங்களது கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மாயாவதிக்கு பதிலடு கொடுக்கும் வகையில் கடந்த 9-ம் தேதி மீரட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், ஒரு நாளுக்கு முன்பு மாயாவதி என்ன பேசினார் என்பது உங்களுக்கு தெரியும். அவருக்கு முஸ்லீம் மக்களின் வாக்குகளே தேவை. மாபெரும் கூட்டணி மற்ற மக்களின் வாக்குகளை விரும்பவில்லை. அவர்களுக்கு அலி மீது நம்பிக்கை உள்ளது என்றால், எங்களுக்கு பஜ்ரங்குபலி மீது நம்பிக்கை உள்ளது' என பேசினார். 

இருவரின் பேச்சு குறித்தும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக இருவருக்கும் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. 24 மணி நேரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் இருவரது தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படாததால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, யோகி ஆதித்யநாத் 72 மணி நேரம் பிரசாரம் செய்ய தடையும், மாயாவதி 48 மணி நேரம் பிரசாரம் செய்ய தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை
நாளை காலை 6 மணி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத உணர்வுகளை தூண்டி பேசும் அரசியவாதிகளின்  வெறுப்பு பேச்சுக்களை கண்டு கொள்ளாமல் தூங்கி கொண்டிருக்கின்றீர்களா? என இன்று காலை உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடியிருந்தது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

NEXT STORY
யோகி ஆதித்யநாத், மாயாவதி பிரசாரம் செய்ய தடை: தேர்தல் ஆணையம் அதிரடி Description: மத உணர்வுகளை தூண்டி பேசும் அரசியவாதிகளின் வெறுப்பு பேச்சுக்களை கண்டு கொள்ளாமல் தூங்கி கொண்டிருக்கின்றீர்களா? என தேர்தல் ஆணையத்தை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.
Loading...
Loading...
Loading...