ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது பதிலளிக்க சிபிஐக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

செய்திகள்
Updated Sep 12, 2019 | 14:39 IST | Times Now

ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது 7 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்றம், செப்டம்பர் 23-ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது.

P Chidambaram, ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்  |  Photo Credit: BCCL

புது டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்த மனு மீது 7 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு சிபிஐக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை எதிர்த்தும், அவருக்கு ஜாமின் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு மீது 7 நாட்களுக்குள் நிகழ்நிலை அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், செப்டம்பர் 23-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

நீதிமன்ற காவலை எதிர்த்து தாக்கல் செய்த இரண்டாவது மனுவை சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் திரும்பப்பெற்றனர்.

கடந்த ஆகஸ்டு மாதம் 21-ஆம் தேதி ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. இதனை தொடர்ந்து, செப்டம்பர் 19-ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.

ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது 2007-ல் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு முறைகேடாக ரூ.305 கோடி அளவிற்கு அந்நிய முதலீடு பெற்ற வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...