உபி கலவரம்: பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம் - பிரியங்கா காந்தி

செய்திகள்
Updated Jul 20, 2019 | 18:47 IST | Times Now

உபியில் சோன்பத்ரா கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை பிரியங்கா காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Priyanka Gandhi, பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி  |  Photo Credit: ANI

சோன்பத்ரா:  உ.பி.யில் சோன்பத்ரா கலவரத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் சார்பில் தலா  ரூ. 10 லட்சம்  வழங்கப்படும் என அக்கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா பகுதியில் உள்ள முர்தியா கிராம மக்களுக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ஊர் தலைவர் யக்யா தத் என்பவருக்கும் நிலப் பிரச்சனை இருந்துள்ளது. அந்த நிலத்தை கைப்பற்றுவதற்காக கடந்த 17ஆம் தேதி தனது அடியாள்களுடன் வந்த யக்யா தத்துக்கும் கிராம மக்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 10 சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கி குண்டு காயங்களுடன் மீட்கப்பட்ட பலர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று அங்கு சென்றார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அனுமதிக்க முடியாது என காவல் துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து தொண்டர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அவர் கைது செய்யப்பட்டார். 

இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பின்னரே தாம் இங்கிருந்து வெளியேறுவதாக பிரியங்கா கூறியதால் இரவு முழுவதும் மிர்சாபூர் விருந்தினர் மாளிகையில் தங்கவைக்கப்பட்டார். இரண்டாவது நாளான இன்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.  பின்னர் சோன்பத்ரா கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது.  இதையடுத்து அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த பிரியங்கா, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...