ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதி அலுவலகம் வரும்: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

செய்திகள்
Updated Nov 13, 2019 | 15:38 IST | Times Now

ஆா்டிஐ சட்ட வரம்பிற்குள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகமும் வரும் என்று முக்கியத்துவம் வாய்ந்த தீா்ப்பை டெல்லி உயா்நீதிமன்றம் கடந்த 2010-ல் வழங்கியது.

Supreme Court of India
Supreme Court of India   |  Photo Credit: BCCL

டெல்லி: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகமும் வரும் என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் வரும் என்று டெல்லி உயா்நீதிமன்றம் கடந்த 2010-இல் தீா்ப்பு வழங்கியிருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்ற பதிவாளா், அதன் மத்திய பொதுத் தகவல் அதிகாரி ஆகியோர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு  ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயின் பதவிக்காலம் வரும் 17-ம் தேதியோடு முடிவடைகிறது. இதனால் முக்கிய வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வருமா? என இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான என்.வி.ரமணா, டி.ஒய்.சந்திரசூட், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று பிற்பகலில் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

அதன்படி, தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் வரும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்பட 3 நீதிபதிகள் ஒரே தீர்ப்பை வழங்கியுள்ளனா். மற்ற இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளனர். தலைமை நீதிபதி அலுவலகமும் வெளிப்படைத் தன்மை கொண்டது என்பதற்காக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

NEXT STORY