இன்று விண்ணில் பாயத் தயாராகிறது சந்திராயன் - 2

செய்திகள்
Updated Jul 22, 2019 | 07:58 IST | Times Now

சந்திரயான்-2 தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் ஏவப்படுவது நிறுத்தப்பட்ட நிலையில் இன்று மீண்டும் விண்ணில் ஏவப்பட இருக்கிறது.

சந்திராயன் - 2
சந்திராயன் - 2  |  Photo Credit: Twitter

ஜூலை 15 தேதி அதிகாலை விண்ணில் ஏவப்பட தயாராக இருந்த சந்திராயன் - 2 விண்கலம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 56 நிமிடங்களுக்கு முன்னால் நிறுத்தப்பட்டது. மீண்டும் கோளாறுகள் சரிசெய்யப்பட்டு ஏவப்படும் என்று கூறியிருந்தது இஸ்ரோ நிறுவனம். அதன்படி இன்று மதியம் 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுண்டவுன் நேற்று மாலை 6.43 மணிக்குத் தொடங்கியது. 

இந்தியா சார்பில் முதல் முறையாக  நிலவைப்பற்றி ஆராய்ச்சி செய்வதற்கு அனுப்பட்ட செயற்கைக்கோள் சந்திராயன் 1 ஆகும். கடந்த 2008-ஆம் ஆண்டு நிலவுக்கு ஏவப்பட்ட சந்திராயன் 1-யை தொடர்ந்து 10 ஆண்டுகள் தீவிர முயற்சிக்குப் பிறகு சந்திராயன் 2 விண்வெளிக்கு அனுப்பட உள்ளது.
உலக நாடுகள் போகாத நிலவின் தென் துருவத்துக்கு இந்த விண்கலத்தை அனுப்ப இருந்தது இஸ்ரோ. இதனால் இந்தியாவுக்கு மட்டுமின்றி மற்ற நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களுக்கும் இது ஒரு முக்கியமான நிகழ்வாகும். 

சுமார் 978 கோடி ரூபாய் செலவில் தயாரான இந்த சந்திராயன் - 2 விண்கலம் தனது கவுண்ட் டவுனை ஜூலை 14ஆம் தேதி காலை தொடங்கியது. ஜிஎஸ்எல்வி – மார்க் 3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணுக்கு செலுத்தப்பட இருந்த  சந்திரயான்-2 சரியாக 56 நிமிடங்கள் 24 நொடிகள் இருக்கும் நிலையில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  ஏவப்படுவது நிறுத்தப்பட்டது. 
நேற்று விமான நிலையத்தில் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், ‘’ இனிமேல் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட சாத்தியம் இல்லை. நாளை (இன்று) சந்திராயன் - 2 விண்கலம் வெற்றிகரமான விண்ணில் ஏவப்படும் என்று கூறினார்.


சந்திராயன் எப்படி செயல்படும்? 

சந்திரயன் – 2 விண்கலமானது ஆர்பிட்டர், லேண்டர் , ரோவர் ஆகிய மூன்று தொகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் லேண்டர் 'விக்ரம்' என்றும்,  ரோவர் 'பிரக்யான்' என்றும் அழைக்கப்படுகிறது. 'விக்ரம்' என்ற பெயர் முன்னாள் இஸ்ரோ தலைவரான விக்ரம் சாராபாயின் நினைவாக வைக்கப்பட்டுள்ளது. ஆர்பிட்டர் ப்ரொபல்ஷன்  மூலம் நிலவுக்கு சென்ற பிறகு நிலவின் மேற்பரப்பை ஆராய்ந்து தரை இறங்குவதற்கான பாதுகாப்பான இடத்தை கண்டறியும். அதன் பிறகு ஆர்பிட்டரை விட்டு  லேண்டர் பாகம் தனியாக பிரிந்து 54 நாட்கள் கழித்து தென் துருவத்தில் தரையிறங்கும். அதன் பிறகு ரோவர் 'பிரக்யான்' 14 நாட்களுக்கு நிலவின் மேற்பரப்பில் ஆராய்ச்சிகளை செய்யும். ஆர்பிட்டர் ஆனது  நிலவில் ஓர் ஆண்டுவரை ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்.  


 

NEXT STORY