அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

செய்திகள்
Updated Nov 09, 2019 | 00:26 IST | Times Now

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், பாதுகாப்பு பணிகளுக்காக உத்தரப்பிரதேசத்திற்கு துணை ராணுவப்படை வீரர்கள் 4 ஆயிரம் பேரை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

Security forces conduct flag march
Security forces conduct flag march  |  Photo Credit: IANS

லக்னோ: அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வர  உள்ள நிலையில் பிரச்சனை ஏற்படாத வகையில் கண்காணிக்குமாறு அனைத்து மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கா் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகியோா் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது. 40 நாட்கள் நடைபெற்ற விசாரணையின் இறுதியில், வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

இதையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17 ஆம் தேதி ஓய்வு பெற இருக்கிறாா். அதற்கு முன்னதாக இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க அயோத்தி, காஜியாபாத் உள்பட உத்தரபிரதேசத்தின் பல நகரங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. நவம்பர் இறுதி வரை காவல்துறையினர் விடுப்பு எடுக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளுக்காக உத்தரப்பிரதேசத்திற்கு துணை ராணுவப்படை வீரர்கள் 4 ஆயிரம் பேரை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. இதேபோன்று நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  
 

NEXT STORY