லக்னோ: அயோத்தி வழக்கு தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய அனைத்திந்திய முஸ்லீம் தனி சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கா் நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த 9 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதன்படி, சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியது. அதேவேளையில் மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் இஸ்லாமியர்களுக்கு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்தநிலையில் லக்னோவில் அகில இந்திய முஸ்லீம் தனிநபா் சட்ட வாரியத்தின் தலைவர் மவுலானா வாலி ரஹ்மானி தலைமையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், சன்னி வகுப்பு வாரியம், பாபர் மசூதி நடவடிக்கை குழு மற்றும் அகில இந்திய மஜ்லிஸ் இ இத்ஹதுல் முஸ்லிமீன் தலைவா் அசாதுதீன் ஓவைசி உள்ளிட்டோர் பங்கேற்றனா். கூட்டத்தின் முடிவில் அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் முடிவு செய்துள்ளனா்.
இதுகுறித்து கூட்டத்தில் பங்கற்ற ஜாமியத் உலமா அமைப்பின் தலைவர் மவுலானா அர்ஷத் கூறுகையில், " அனைத்து சட்ட வல்லுநர்களுடனும் ஆலோசித்தபின்தான் சீராய்வு மனுத் தாக்கல் செய்ய முடிவு செய்தோம். உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இறுதியானது அல்ல" எனத் தெரிவித்தார்.