பற்றி எரியும் பாரிஸ் நோட்ரடேம் கதீட்ரல் - தீயணைக்கும் பணிகள் மும்முரம்!

செய்திகள்
Updated Apr 16, 2019 | 01:51 IST | Times Now

பிரான்ஸ் நாட்டின் நேரக்கணக்கின்படி மாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட இந்த தீவிபத்தால் தேவாலயத்தின் மேற்கூரையானது பற்றி எரிய ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக பரவிய தீ, தேவாலயம் முழுவதையுமே ஆக்கிரமிக்கத் தொடங்கியது.

paris, பாரிஸ்
பாரிஸ் கதீட்ரல்   |  Photo Credit: Twitter

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னமான நோட்ரடேம் கதீட்ரல் தேவாலயம் கடுமையான தீவிபத்துக்கு உள்ளாகியுள்ளது பாரிஸ் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரான்ஸ் தலைநகர், பாரிஸில் அமைந்துள்ள 850 வருட பழமையான தேவாலயம் நோட்ரடேம் கதீட்ரல். ஒவ்வொருவருடமும் லட்சக்கணக்கானவர்கள் வந்து செல்லும் சுற்றுலாப்பிரதேசமாகவும், புனிதப் பிரதேசமாகவும் திகழ்வது இது. நாளொன்றுக்கு 30,000க்கும் மேற்பட்டவர்களும், வருடத்திற்கு 13 மில்லியன் மக்களும் வந்து செல்லும் பிரபலமான பாரம்பரிய சின்னமாக திகழ்வது நோட்ரடேம். 

பிரான்ஸ் நாட்டின் நேரக்கணக்கின்படி மாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தால் இந்த தேவாலயத்தின் மேற்கூரையானது பற்றி எரிய ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக பரவிய தீ, தேவாலயம் முழுவதையுமே ஆக்கிரமிக்கத் தொடங்கியது.

paris

பரவிய தீயால் ஏற்பட்ட புகைமண்டலம் நகரம் முழுவதும் பரவியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். 

 

 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பிரான்ஸ் ஜனாதிபதியுடன், நகர மேயர் ஆன் ஹிடல்கோ, பிரதமர் எட்வர்ட் பிலிப் ஆகியோரும் இந்த துயரச் சம்பவத்தைக் கண்டு வருத்தமடைந்தனர். தொன்மையை தேக்கி வைத்திருக்கும் இந்த தேவாலயம் பாரிஸ் நகரின் அங்கமாக திகழ்வது. இது இல்லாத பாரிஸ் நகரை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்று கண்ணீர் சிந்தி வருகின்றனர் மக்கள்.

 

 

ஐரோப்பியர்களின் கட்டிடக் கலைக்கு உதாரணமாக திகழ்ந்துவந்த இந்த பழமையான தேவாலயம் தீக்கிரையானது உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 400க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க பல்வேறு முயற்சிகள் எடுத்தும், தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் திணறி வருகின்றனராம்.

 

 

சமீபத்தில் புனரமைத்தல் பணிகள் தொடங்கியிருந்த இந்த தேவாலயத்தில் எப்படி தீப்பிடித்தது என்பது குறித்த காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிட்டதட்ட 6 மில்லியன் யூரோ செலவில் இந்த தேவாலயத்தின் சிகரம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வந்தது. 

இச்சம்பவம் குறித்து ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ‘இந்த தீவிபத்து பார்ப்பதற்கே அச்சமூட்டுவதாக இருக்கிறது. விரைந்து செயல்பட்டு ஹெலிகாப்டர் மூலமாக அதை அணைக்க முயற்சி செய்யுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.  295 அடி உயரத்தில் ஒரு சிறு பொறியாக கிளம்பிய இந்த தீ, விரைவில் பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. 

 

 

கதீட்ரல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மிக உயரமான கோபுரங்களைக் கொண்டுள்ளதால் தண்ணீர்க்குழாய்கள் மூலமாக தீயை அணைப்பது கடினமாக உள்ளதாகவும், ஹெலிகாப்டர் மூலமாக தீயை அணைக்கும் பணிகளும் கதீட்ரலுக்கு ஆபத்தாகவே முடியும் என்பதால் தீயணைப்பு வீரர்கள் தவித்து வருகின்றனர்.  உயிரிழப்புகள் குறித்தோ, தீயில் சிக்கி யாரேனும் தவிக்கிறார்களா என்பது குறித்தோ இதுவரையில் விவரங்கள் வெளியாகவில்லை. 

NEXT STORY
பற்றி எரியும் பாரிஸ் நோட்ரடேம் கதீட்ரல் - தீயணைக்கும் பணிகள் மும்முரம்! Description: பிரான்ஸ் நாட்டின் நேரக்கணக்கின்படி மாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட இந்த தீவிபத்தால் தேவாலயத்தின் மேற்கூரையானது பற்றி எரிய ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக பரவிய தீ, தேவாலயம் முழுவதையுமே ஆக்கிரமிக்கத் தொடங்கியது.
Loading...
Loading...
Loading...