இலங்கை குண்டுவெடிப்பில் எட்டு இந்தியர்கள் பலி!

செய்திகள்
Updated Apr 22, 2019 | 22:35 IST | Times Now

இலங்கை தலைநகர் கொழும்பு பேருந்து நிலையத்தில் பஸ் ஒன்றில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல். கொழும்பு நகரில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டை செயலிழக்கச் செய்ய முயன்றபோது, வெடித்துச் சிதறியது.

கொழும்பு நகரில் பஸ் ஒன்றில் 87 டெட்டனேட்டர்கள் கண்டெடுப்பு
கொழும்பு நகரில் பஸ் ஒன்றில் 87 டெட்டனேட்டர்கள் கண்டெடுப்பு  |  Photo Credit: PTI

கொழும்பு: இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பால், ஏற்பட்ட பதற்றம் தணியாத நிலையில், தலைநகர் கொழும்பு பேருந்து நிலையத்தில் பஸ் ஒன்றில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், புறநகர் பகுதியில் இருந்து வெடிகுண்டு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

டெட்டனேட்டர்கள் மற்றும் வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் பணியில், வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். இலங்கை முழுவதும் பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. சாலையில் செல்லும் அனைத்து பேருந்துகள், கார்கள் மற்றும் வாகனங்களில் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. 

இலங்கை கடற்பகுதியிலும் அந்நாட்டு கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் கடற்பகுதி வழியாக தப்பிச்செல்ல விடாமல் தடுப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் மேலும் தாக்குதல்கள் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக இலங்கையில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் கூடும் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதனால், ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் உள்ள பயணிகள் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

இதனிடையே, கொழும்பு நகரில் கொச்சிக்கடை கந்தானை பகுதியில் தேவாலயம் அருகே நிறுத்தப்பட்டிருந்த வேன் ஒன்றில் வெடிகுண்டு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு சென்று வெடிகுண்டை செயலிழக்கச் செய்ய முயன்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக அந்த வெடிகுண்டு, வெடித்துச் சிதறியது. 

இந்நிலையில் இலங்கை குண்டுவெடிப்பில் வெமுராஜ் துளசிராம் மற்றும் எஸ்.ஆர்.நாகராஜ் என்னும் மேலும் இரண்டு இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை ஆணையம் உறுதி செய்துள்ளது. இந்நிலையில் ஹெச்.சிவக்குமார் என்கிற மற்றொமொரு இந்தியர் இந்த குண்டுவெடிப்பில் பலியானதாகவும், இதனால் இலங்கை குண்டுவெடிப்பில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இலங்கையில் நடைபெற்றுள்ள தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் குறித்தான விசாரணைகளுக்கு உதவும் வகையில் இன்டர்போல் காவல்துறையினர் இலங்கை விரைகின்றனர். மேலும், இவர்களுடன் வெடிமருந்து மற்றும் தடயவியல் துறை நிபுணர்களும் கொழும்பு விரைகின்றனர். இந்நிலையில், இலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களில் பங்களாதேஷ் நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பேரனான ஜயான் என்னும் 8 வயது சிறுவனும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜயானின் பெற்றோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

NEXT STORY
இலங்கை குண்டுவெடிப்பில் எட்டு இந்தியர்கள் பலி! Description: இலங்கை தலைநகர் கொழும்பு பேருந்து நிலையத்தில் பஸ் ஒன்றில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல். கொழும்பு நகரில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டை செயலிழக்கச் செய்ய முயன்றபோது, வெடித்துச் சிதறியது.
Loading...
Loading...
Loading...