உலக மனநல தினம் 2019: உள்ளத்தை பாதுகாக்க 6 வழிகள்

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
Updated Oct 10, 2019 | 16:54 IST | Times Now

உடல்நலம் எந்தளவு முக்கியமோ அதேயளவு மனநலமும் முக்கியம். மேலும், உடல்நலனும் மனநலனும் நெருங்கிய தொடர்புடையவை ஆகும்.

உலக மனநல தினம் 2019, World Mental Health Day 2019
உலக மனநல தினம் 2019  |  Photo Credit: Getty Images

மனநலம் குறித்து விழுப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் உலக மனநல தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தாண்டு ’தற்கொலை தடுப்பு’ என்ற தலைப்பில் உலக மனநல தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவல்படி, ஒவ்வொரு 40 நொடிக்கும் ஒரு தற்கொலை நடக்கிறது. அதாவது, ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை காரணமாக உயிரிழக்கின்றனர். வயது, பாலினம் என்ற வேறுபாடுகளை கடந்து அனைவரும் தற்கொலைக்கு இரையாகின்றனர். தற்கொலை ஆபத்தானது என்றாலும் தடுக்க முடியாதது அல்ல. மன அழுத்தம் உள்ளிட்ட மனநோய்கள் ஒருவரை தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளக்கூடும் என்பதால் மனநலம் பேணுவது அவசியமாகும். 

ஒருவர் மனம் நலமாக இருக்கிறது என்றால் அதற்கு என்ன பொருள்? உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, தனது ஆற்றலை அறிந்து, தினசரி வாழ்வில் ஏற்படும் மன இறுக்கத்தை சமாளித்து, ஆக்கப்பூர்வமாக உழைத்து, சமுதாயத்திற்கு உறுப்படியாக பங்காற்றுபவரே மனநலனுடன் இருப்பவர் ஆவார். வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் நமது சிந்தனை, உணர்வுகள், நடத்தை ஆகியவற்றை தீர்மானிப்பது மனநலம் தான்.

உடல்நலம் எந்தளவு முக்கியமோ அதேயளவு மனநலமும் முக்கியம். மேலும், உடல்நலனும் மனநலனும் நெருங்கிய தொடர்புடையவை ஆகும். மனநலம் குன்றினால், உடல்நலமும் குன்றும். இதனால், இருதய நோய் உள்ளிட்ட உடல் உபாதைகளும் ஏற்படலாம். அதே போல, உடல்நலம் குன்றினால் மனநோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

உடல்நலன் மற்றும் மனநலனை நமது வாழ்க்கை முறை பெருமளவு பாதிக்கிறது. எனவே, தினசரி வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய சில நல்ல பழக்கங்களை தற்போது காணலாம்:

  1. சரிவிகித உணவு எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். மன அழுத்தம் போன்ற நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள ஆரோக்கியமான உணவு பழக்கம் அவசியமாகும்.
  2. தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
  3. இரவில் போதியளவு உறக்கம் மிக அவசியம்.
  4. வாழ்க்கை சில வேளைகளில் கடினமானாலும் நேர்மறையான மனப்பாங்குடன் இருத்தல் வேண்டும்.
  5. குறிப்பிட்ட இடைவெளியில் உடற்பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
  6. ஆண்டிற்கு ஒருமுறை மனநல ஆலோசகரிடம் பரிசோதனை மேற்கொள்ளவும்.

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட பரிந்துரைகள் அனைத்தும் பொது பயன்பாட்டிற்கானவை. அவை யாவும் மருத்துவ ஆலோசனையாக கருதப்படக் கூடாது. உணவு பழக்கங்களில் மாற்றங்கள் செய்யும் முன் உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனை பெறுங்கள்.

NEXT STORY