டெல்லி: உலக உணவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அதிர்ச்சி தகவல் ஒன்றை ஐநா வெளியிட்டுள்ளது. உலகில் ஐந்து வயதிற்கும் குறைவான சுமார் 70 கோடி குழந்தைகள் எடை குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ இருப்பதாக யூனிசெஃப் எனப்படும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஒரே நாட்டில், ஒரே பகுதியில், ஏன் ஒரே வீட்டில் கூட எடை கூடுதலாக ஒரு குழந்தையும் எடை குறைவாக மற்றொரு குழந்தையும் இருப்பதாக யூனிசெஃப் தலைவர் தெரிவித்துள்ளார். ஆறு மாதத்திற்கும் குறைவாக உள்ள ஐந்தில் இரண்டு குழந்தைகளுக்குத் தான் போதியளவு தாய்ப்பால் கிடைக்கிறது. தாய்ப்பால் பருகாத குழந்தைகளுக்கு போதியளவு ஊட்டச்சத்து கிடைக்காமல் போவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, கற்றல் குறைபாடு ஏற்படுவதுடன் பார்வை மற்றும் கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது.
மறுபுறம், தேவையில்லாத உணவுகளை குழந்தைகள் அதிகம் சாப்பிடுவதால் சிறுவயதிலேயே உடற்பருமன் ஏற்படுகிறது. உப்பு, இனிப்பு மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள சிற்றுண்டிகளை குழந்தைகள் அதிகம் சாப்பிடுகின்றனர். இது போன்ற சிற்றுண்டிகளை பள்ளிக்கு அருகில் விற்கக்கூடாது என யூனிசெஃப் பரிந்துரை செய்துள்ளது. மேலும், அவற்றின் விளம்பரத்தை கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.
அதே போல, இனிப்பு மற்றும் குளிர்பானங்கள் மீது வரி விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்த வரியை வாடிக்கையாளர் கண்களில் படும்படி அட்டையின் முன்புறம் அச்சிடவும் யூனிசெஃப் கூறியுள்ளது. மேலும், தாய்ப்பாலுக்கு மாற்றாக தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனையை முறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு உணவு கிடைக்கச் செய்வதுடன் நில்லாது சரியான உணவு சாப்பிடச் செய்வது அவசியம் என யூனிசெஃப் தலைவர் தெரிவித்துள்ளார்.