உடலை சீராக வைத்துக் கொள்வதன்மூலம் அனைவரும் சிறப்பான வாழ்க்கையை வாழ முடியும். குறிப்பாக சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள், தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்வதன்மூலம் தங்களது உடல் நிலையை சீராக வைத்துக் கொள்ள முடியும். குறிப்பாக நடைப்பயிற்சி மேற்கொள்வதன்மூலம் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுவதோடு, உடல் எடையையும் சரியாக பராமரித்துக் கொள்ள முடிகிறது.
டைப் 1 மற்றும் டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது இயல்பாக உள்ளது. அதிகப்படியான சர்க்கரை அளவு உள்ளவர்கள் முறையாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், ரத்த நாளங்கள் பாதிப்பு, நரம்புத் தளர்ச்சி மற்றும் உனல் பாகங்கள் பாதிப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதிக அளவு தண்ணீர் தாகம், தலைவலி, உடல் எடைக்குறைவு போன்றவை ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பதற்கான அறிகுறிகளாகும்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முறையான உடற்பயிற்சி மேற்கொள்வது சிகிச்சையின் ஒரு முக்கிய அங்கமாகும். நாள்தோறும் உடற்பயிற்சி மேற்கொள்வதோடு, சரியான உணவுப் பழக்கவழக்கம், தியானம் போன்றவை சர்க்கரை நோயாளிகள் உடலை சீராக பராமரிக்கும் வழிமுறைகளாகும். டைப் 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முறையான உடற்பயிற்சி மேற்கொள்வதன்மூலம் இருதய நோய் போன்றவற்றில் இருந்து காத்துக்கொள்ள உதவுகிறது.
Diabetes.co.uk ஆய்வின்படி, நடைப்பயிற்சி மேற்கொள்வது ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க இயற்கையாக உதவுவது தெரியவந்துள்ளது. ஆண்கள் வாரத்தில் 5 நாட்கள் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதேசமயம், இருதய நோய் பாதிப்பு உள்ளவர்கள் பளுதூக்குதல் போன்ற உடற்பயிற்சிகளில் ஈடுபடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், இன்சூலின் மருந்து எடுத்துக்கொள்பவர்கள், அதனை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் எடுக்கும்முன் ரத்தில் உள்ள சர்க்கரையின் அளவை தெரிந்து கொண்டு, பின்னர் பயிற்சிகளைத் தொடங்க வேண்டும் என்பது முக்கியமானதாகும். நடைப்பயிற்சி போன்ற உடற்பயிற்சிகள் மேற்கொள்ளும்போதும், சர்க்கரையின் அளவு தொடர்ந்து அதிகரித்தால், மருத்துவரிடம் சிகிச்சைபெறுவது சிறந்ததாகும்.