2019-ன் தலைசிறந்த 100 இடங்களில் சர்தார் படேலின் ’ஸ்டேச்சூ ஆஃப் யூனிட்டி’!

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
Updated Aug 28, 2019 | 14:29 IST | Times Now

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இச்சிலையினை திறந்து வைத்தார்.

Statue of Unity, ஒற்றுமையின் சிலை
ஒற்றுமையின் சிலை  |  Photo Credit: Times Now

புது டெல்லி: குஜராத்தில் நிறுவப்பட்டுள்ள ’ஸ்டேச்சூ ஆஃப் யூனிட்டி’ எனும் ஒற்றுமையின் சிலை டைம்ஸ் இதழின் 2019-ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த இடங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மேலும், மும்பை மாநகரிலுள்ள சோஹோ ஹவுஸ் விடுதியும் இப்பட்டியிலில் இடம்பெற்றுள்ளது. 

ஒற்றுமையின் சிலை பிரபலமான சுற்றுலாத் தளமாக வளர்ந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், “டைம்ஸ் இதழின் 2019-ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த இடங்களின் பட்டியலில் ஒற்றுமையின் சிலை இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சி தரும் செய்தியாகும். சில நாட்களுக்கு முன்பு 34,000 பேர் ஒரே நாளில் ஒற்றுமையின் சிலையை கண்டுகளித்தனர். இச்சிலை ஒரு பிரபல சுற்றுலாத் தளமாக வளர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார்.

குஜராத் மாநிலத்தின் சாது-பெட் தீவில் 12 சதுர கி.மீ. அளவிலான செயற்கை குளத்திற்கு நடுவே 20,000 சதுரமீட்டர் பரப்பளவில் ஒற்றுமைக்கான சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இச்சிலையினை திறந்து வைத்தார்.

நர்மதா ஆற்றில் கடந்த இலையுதிர் காலத்தில் திறக்கப்பட்ட 597 அடி உயர இச்சிலை உலகின் மிக உயர்ந்த சிலையாகும். இந்தியாவின் மேற்கு பகுதியிலுள்ள குஜராத் மாநிலத்தில் சர்தார் சரோவர் அணைக்கு அருகே அமைந்திருக்கும் இச்சிலைக்குள் செல்பவர்கள் அருகே உள்ள மலைகளின் உச்சி வரை காண முடியும். இந்தியாவின் முதல் துணை பிரதமராக 1947-ல் பதவியேற்ற சர்தார் வல்லபாய் படேலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. 

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...