ரம்ஜான் பண்டிகையை சிறப்பாக்கும் சில உணவுகள்!

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
Updated Jun 05, 2019 | 09:11 IST | Times Now

ரம்ஜான் என்றாலே நமக்கு முதலில் ஞாபகத்துக்கு வருவது சாதி, மத வேற்றுமையின்றி பகிர்ந்துண்ணப்படும் நோன்புக் கஞ்சியும், பிரியாணியும்தான்.

tamil nadu, தமிழ்நாடு
ரமலான் பண்டிகை  |  Photo Credit: Getty Images

சென்னை: இஸ்லாமியர்களால் புனித மாதமாகக் கொண்டாடப்பட்டு, ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப்படும் ரமலான் மாதத்தில் நோன்பின் முடிவான ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.

ரம்ஜான் என்றாலே நமக்கு முதலில் ஞாபகத்துக்கு வருவது சாதி, மத வேற்றுமையின்றி பகிர்ந்துண்ணப்படும் நோன்புக் கஞ்சியும், பிரியாணியும்தான். அதுவும் இஸ்லாமியர்கள் வீட்டு பிரியாணிக்கு ஒரு தனிச்சுவை எப்போதுமே உண்டு.

அந்தவகையில் பாரம்பரிய நோன்புக்கஞ்சி, பிரியாணி தாண்டி மேலும் பல உணவு வகைகளும் ரம்ஜான் நாளில் சிறப்பாக பகிர்ந்துண்ணப்படுகிறது. அதில் ஒவ்வொரு நாடும் சிறப்பான ரெசிப்பிகளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் சில சுவாரசியமான ரமலான் சிறப்பு ரெசிப்பிகள் இங்கே உங்களுக்காக.

ஃபுல்ஜர் சோடா:

கேரள வாழ் இஸ்லாமிய நண்பர்களிடம் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த ஃபுல்ஜர் சோடா. இப்தார் விருந்துகளிலும் முதலிடம் பிடிப்பது. எலுமிச்சையின் புளிப்பு நறுமணமும், இஞ்சியின் தூக்கலான வாசனையும், கொஞ்சம் மிளகாயின் காரமும், சர்க்கரைப் பாகின் தெவிட்டாத இனிப்புச் சுவையுமாக இந்த சோடா சொர்க்கம். இதன் தயாரிப்பும் மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. 

fuljar soda

பெரிய கிளாஸ் ஒன்றில் தளும்ப, தளும்ப சோடாவை ஊற்றிக் கொள்ள வேண்டும். அதில் புதினா, எலுமிச்சை உங்கள் சாய்ஸ். அந்த பெரிய கிளாஸுக்குள் மூழ்கும் அளவிற்கு சிறிய கிளாஸ் ஒன்றில் எலுமிச்சைச் சாறு, இஞ்சி, பச்சை மிளகாய், கொஞ்சமாக உப்பு கலந்த கலவையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலேயே சர்க்கரைப் பாகையும் கலந்து கொள்ள வேண்டும்.  இப்போது முழுவதும் சோடா நிரம்பிய அந்த பெரிய கிளாஸுக்குள் இந்த சிறிய கிளாஸை மூழ்க வைக்க வேண்டும். சோடாவுடன் எலுமிச்சை மிக்ஸ் கலந்தவுடன் டக் என்று எடுத்துக் குடித்தால் சுவை டாப் கிளாஸ். 

பாக்லவா:

மிடில் ஈஸ்ட் ஸ்பெஷல் ரம்ஜான் இனிப்பு இது. பாதாம், நெய் அல்லது வெண்ணெய் என்று கொஞ்சம் ரிச்சான ரெசிப்பி. பைலோ ஷீட்ஸ் எனப்படுபவை மாவால் செய்யப்படுவது. அது ரெடிமேடாகவும் கிடைக்கிறது. ப்ரெட் துண்டுகள், பிஸ்தா, பாதாம், நெய், சர்க்கரை, தண்ணீர், ரோஸ் வாட்டர் இவையெல்லாம் தேவையான பொருட்கள். இது கிட்டதட்ட பேக் செய்து எடுக்கப்படும் கேக் போன்றது. 

baklava

மேற்கூறிய பைலோ ஷீட்டினை பேக்கிங் ட்ரேயில் விரித்துக் கொள்ள வேண்டும். அதன் மீது வெண்ணெய் அல்லது நெய் தடவ வேண்டும். உதிர்த்து வைத்த மில்க் ப்ரெட்டினை இதன் மீது பரப்பி, அதன்மீது பிஸ்தா, பாதாம் உடைத்தவற்றை லேயராக பரப்பிக் கொள்ள வேண்டும். மீண்டும் நான்கைந்து அடுக்குகள் வரும் வரை இதனை லேயர் லேயராக செய்ய வேண்டும். கடைசியாக வைக்கும் பைலோ ஷீட்டினை நன்கு அழுத்தி பிரிட்ஜில் வைத்து நன்கு குளிர்விக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து வெளியில் எடுத்து, ஜில் தன்மை குறைந்ததும் பேக் செய்து எடுக்க வேண்டும். அதே நேரத்தில் சர்க்கரை சிரப் இன்னொரு பக்கம் தயார் செய்து கொள்ள வேண்டும். பேக் செய்யப்பட்டு எடுக்கப்பட்ட பாக்லவா மீது, சர்க்கரைப் பாகை தேன் போல ஊற்றி ஊறவைத்து பரிமாறினால் நாக்கு இதற்கு அடிமையாகிவிடும். 

கறி ப்ரான் (curry prawn):

மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் புகழ்பெற்றதாக பார்க்கப்படுகிறது இந்த கறி ப்ரான் ரெசிப்பி. தாய்லாந்தின் புகழ்பெற்ற இறால் மற்றும் பைனாப்பிள் கலந்து தயாரிக்கப்படுகிறது இந்த க்ரேவி. சமையல் எண்ணெயை சூடாக்கி அதில் தாய்லாந்து ஸ்பெஷல் சிகப்பு மசாலா கறி பேஸ்ட்டினை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

curry prawn

அடிபிடிக்க விடாமல் கிளறி பச்சை வாசனை போனதும் இதில் தேங்காய்ப்பால், தேவையான நீர், காபிர் லைம் எனப்படும் கொழுமிச்சை இலை எல்லாம் சேர்த்து கொதிக்க விட வேண்டும். நன்கு கொதித்ததும் இதில் சுத்தம் செய்யப்பட்ட இறால், பைனாப்பிள் துண்டுகள் சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்கவும். தொடர்ந்து இதில் பிஷ் சாஸ், கொஞ்சம் பனங்கற்கண்டு அல்லது சர்க்கரை, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்தால் கறி ப்ரான் ரெடி. இது கிட்டதட்ட மாங்காய் பச்சடி போல அசைவ பச்சடி. 

ஃபல் மெடாமெஸ்:

எகிப்தின் சிறப்பான ரமலான் உணவாக காலை உணவிலேயே தவறாமல் இடம்பிடிப்பது இந்த ஃபல் மெடாமெஸ். 

ful

எகிப்தின் ஃபாவா பீன் ஊறவைத்து வேகவைக்கப்பட்டது, உப்பு, கொத்தமல்லி, ஆலிவ் ஆயில், எலுமிச்சை, மிளகுத்தூள், பூண்டு, மிளகாய் ப்ளேக்ஸ், சீரகம் ஆகியவற்றை சாலட் போல கலந்து பரிமாறப்படுகிறது இந்த ஃபல் மெடாமெஸ். எனினும், ஒவ்வொரு இடத்திலும் இதன் தயாரிப்பு முறை மாறுபடுவது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY