சமைக்காத உணவில் இவ்ளோ பயன்களா? ட்ரெண்டாகும் Raw Foodism!

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
Updated Oct 05, 2019 | 13:32 IST

சமைப்பதன் மூலம் உணவுகளில் ஊட்டச்சத்துகள் குறையும் என்பதால் பச்சையாக உணவுகள் எடுத்துக்கொள்வதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர்.

Raw Foodism, சமைக்காத உணவின் பயன்கள்
சமைக்காத உணவின் பயன்கள்  |  Photo Credit: Getty Images

அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத்தில் முன்னேற்றப் பாதையில் செல்லும் மனித இனம், வாழ்க்கை முறையில் முற்காலத்தை நோக்கி பயனித்துக் கொண்டிருக்கிறது. பசுமை புரட்சி எனும் பெயரில் செயற்கை உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி அதிக மகசூல் ஈட்டிய அதே மனித இனம் தான் தற்போது மீண்டும் இயற்கை விவசாயத்தை நாடி செல்கிறது. 

நவீன மருத்துவத்தில் பல்வேறு முன்னேற்றங்களை கண்டு வரும் அதே வேளையில் பாரம்பரிய மருத்துவத்தை நோக்கி மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், சமைத்து சாப்பிடும் உணவை தவிர்த்து பச்சையாக உணவுகளை எடுத்துக் கொள்ளும் உணவு முறை தற்போது பிரபலமாகி வருகிறது.

சமைப்பதன் மூலம் உணவுகளில் ஊட்டச்சத்துகள் குறையும் என்பதால் பச்சையாக உணவுகள் எடுத்துக்கொள்வதை சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். பச்சை காய்கறிகள், பழங்கள் மட்டுமின்றி சுத்திகரிக்கப்படாத பால், சமைக்கப்படாத இறைச்சி மற்றும் முட்டைகளையும் சிலர் எடுத்துக்கொள்கின்றனர்.

பச்சையாக உணவுகள் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள் என்று வல்லுநர்கள் கூறுபவை:

நார்ச்சத்து
சமைத்த உணவுகளுடன் ஒப்பிடும் போது சமைக்காத உணவுகளில் நார்ச்சத்து மிகுதியாக காணப்படுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகள் ஆகியவை உடல் எடை குறைக்க உதவும். மேலும், ரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும்.

பதப்படுத்தப்படாத உணவு
குளிர்பானம், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சிப்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கலோரி அதிகமாக இருப்பதால் அவற்றை உண்பவர்களுக்கு உடற்பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்தக் கொழுப்பு ஆகியவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பச்சை உணவுகள் பதப்படுத்தப்படாதவை என்பதால் அவற்றால் நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு.

ஊட்டச்சத்து குறையாது
உணவு சமைக்கப்படும் போது ஊட்டச்சத்துகள் இழக்கப்படும். ஆனால், சமைக்கப்படாத உணவுகளில் ஊட்டச்சத்துகள் பாதுகாக்கப்படும்.

குடல் நுண்கிருமிகள் பாதுகாக்கப்படும்
குடலில் உள்ள நுண்கிருமிகள் நம் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்பவையாகும். சமைக்கப்பட்ட உணவுகளால் குடல் நுண்கிருமிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட பரிந்துரைகள் அனைத்தும் பொது பயன்பாட்டிற்கானவை. அவை யாவும் மருத்துவ ஆலோசனையாக கருதப்படக் கூடாது. உணவு பழக்கங்களில் மாற்றங்கள் செய்யும் முன் உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனை பெறுங்கள்.

NEXT STORY