OnamSadhya: 'உப்பேரி, காலன், ஓலன், அட பிரதமன்’ - சுகந்தமான ‘சத்யா’ விருந்து பரிமாறப்படும் முறை!

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
Updated Mar 26, 2019 | 15:08 IST | Times Now

கேரளத்தின் குளிர்ச்சியான மலைபிரதேசத்தில் கிடைக்கும் இஞ்சி, மிளகு, கறிவேப்பிலை என உடலுக்கு வலு சேர்க்கக் கூடிய அனைத்து பொருட்களும் இந்த விருந்தில் அடக்கம்.

Onam sadhya, ஓணம் சத்யா
ஓணம் சத்யா பரிமாறப்படும் வழிமுறைகள்  |  Photo Credit: Getty Images

திருவனந்தபுரம்: கேரளாவின் பாரம்பரிய பழக்கவழக்கங்களில் தனித்தன்மை வாய்ந்த ஒன்றுதான் ஓணம் பண்டிகையன்று பரிமாறப்படும் ’சத்யா’ என்னும் விருந்து.

ஒரு சாதாரண ‘சத்யா’ விருந்தே 25 முதல் 30 வரையிலான பதார்த்தங்களை உள்ளடக்கியதாகும். உணவுப் பொருட்களை மட்டும் மையமாக வைத்து இந்த விருந்து தயாரவதில்லை.

கேரளாவின் பாரம்பரியமான ஆயுர்வேதம், கலாச்சார அறிவு மற்றும் பாரம்பரிய வீட்டுமுறை வைத்தியங்களையும் உள்ளடக்கியதாக அமைகிறது இந்த விருந்து. 

கேரளத்தின் குளிர்ச்சியான மலைபிரதேசத்தில் கிடைக்கும் இஞ்சி, மிளகு, கறிவேப்பிலை என உடலுக்கு வலு சேர்க்கக் கூடிய அனைத்து பொருட்களும் இந்த விருந்தில் அடக்கம். அறுசுவைகளும் ஒன்றிணைந்த ஒரு மனமகிழ்வான விருந்துதான் ‘சத்யா’. 

பதார்த்தங்களைச் சமைப்பதை போலவே அதை பரிமாறுவதிலும் ஒரு கலாச்சார வரிசை அடங்கியுள்ளது. சத்யா விருந்து நல்ல பசுமையான வாழை இலையில்தான் பரிமாறப்பட வேண்டும். வாழை இலையின் நுனிப்பகுதி இடக்கைப்பக்கம் வருமாறு இலை போடப்பட வேண்டும்.

இலையின் இடப்பாகத்தில் முதலில் ‘உப்பேரி’ எனப்படும் சிப்ஸ் வகைகள் பரிமாறப்படுகின்றன.  சாதாரணமாக மூன்று வகையான உப்பேரிகள் பரிமாறப்படுகின்றன. நேந்திரக்காய் சிப்ஸ், சேனைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் சர்க்கர உப்பேரி என்னும் நேந்திரம் பழத்தை சர்க்கரை பாகில் ஊறவைத்த சிப்ஸ் பரிமாறப்படுகின்றன. சில இடங்களில் மோரில் ஊறவைத்து காயவைத்து பொரித்த மோர் மிளகாயையும் பரிமாறப்படுகிறது. தொடர்ந்து இலையின் ஓரத்தில் சிறிது உப்பு பரிமாறப்படுகிறது.

பதார்த்தங்களில் உப்பு குறைவாக உள்ளதாக நினைப்பவர்கள் இதிலிருந்து சேர்த்துக் கொள்ளமுடியும். தொடர்ந்து, எண்ணெயில் பொரித்த ‘பப்படம்’ எனப்படும் அப்பளம் சிறிய மற்றும் பெரிய அளவில் பரிமாறப்படுகிறது. 

கேரளாவின் பிரதான பழங்களில் ஒன்றான ‘சிறுபழம்’ எனப்படும் வாழைப்பழமும், பப்படத்தை தொடர்ந்து பரிமாறப்படுகிறது. உப்பேரி மற்றும் சிறுபழத்தை தொடர்ந்து இடப்புறமாகவே, மூன்று ஊறுகாய்கள் பரிமாறப்படுகின்றன.

பெரும்பாலும் இஞ்சிப்புளி என்னும் இஞ்சி ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், எலுமிச்சை ஊறுகாய் ஆகியவை பரிமாறப்படுகின்றன. செரிமானக் குறைபாடுகளைப் போக்க இஞ்சிப்புளி உதவுகிறது. இனிப்புச்சுவைக்கு இடையில் வித்தியாசமாக நாக்கில் சிறிது புளிப்புச் சுவை கொடுக்க எலுமிச்சை ஊறுகாய் உதவுகிறது. தயிர்சாதம், மோர் ஆகியவற்றிற்கு சிறந்த துணை மாங்காய் ஊறுகாய்.

ஓணம் சத்யா முறைப்படி, இலையில் கிட்டதட்ட ஏழு பதார்த்தங்கள் சாதம் இடுமுன் பரிமாறப்பட வேண்டுமாம். இவற்றில் முக்கியமானது அவியல். வலது மேல்முனையில் இருந்து கூட்டுக்கறிகள் பரிமாறப்படுகின்றன. அவியலுக்கு அடுத்து தோரன் எனப்படும் பொரியல் பரிமாறப்படுகிறது. மாங்காய் மற்றும் பீட்ரூட்டினால் செய்த இரண்டு இனிப்பு பச்சடிகள் அடுத்ததாக பரிமாறப்படுகிறது. சிலர் அன்னாசிப்பழ பச்சடியும் பரிமாறுகின்றனர். 

பெரும்பாலும், சத்யாவில் மசாலாப்பொருட்கள் சேர்க்கப்பட்ட உணவுகள் பரிமாறப்படுவதில்லை. எனினும், சிலர் கூட்டுக்கறி எனப்படும் மசாலா மற்றும் காரம் சேர்ந்த கூட்டு போன்றவற்றையும் சத்யாவில் பரிமாறுகின்றனர். எரிசேரி எனப்படும் கூட்டும் பரிமாறப்படுகிறது. பிறகு, மோரில் தயாரிக்கப்பட்ட ‘காலன்’ எனப்படும் காய்கறிப்பச்சடி பரிமாறப்படுகிறது.

காலனுக்கு அடுத்ததாக பரிமாறப்படும் ஓலன், சுரைக்காய், சிவப்பு காராமணி, தேங்காய்ப்பால் சேர்க்கப்பட்ட பதார்த்தம் இது. கூடவே, வெள்ளரிக்காய், கேரட் ஆகியவை கலந்த தயிர்ப்பச்சடியும் பரிமாறப்படுகிறது. 

அதனைத் தொடர்ந்து நன்கு மசிய வேக வைக்கப்பட்ட பருப்பும் பரிமாறப்படுகிறது. சாத்தில் கலந்து கொள்ள ஏதுவாக பரிமாறப்படும் பருப்பில் சிறிதளவு பசுநெய்யும் சேர்க்கப்படுகிறது. அதன் மனோகரமான வாசனையே பசியைத் தூண்டுகிறது.

சாதம் பரிமாறப்பட்ட பிறகு பருப்பில் இருந்தே சாப்பிட ஆரம்பிக்கின்றனர். பெரிய பப்படத்தை பருப்பு, நெய் கலந்த சாதத்தில் நொறுக்கி சாப்பிடத் தொடங்குகின்றனர். பருப்பு சாதத்தைத் தொடர்ந்து இலையில் சாதத்தில் காய்கறிகள், அரைத்துவிட்ட பொருட்கள், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்ந்த சாம்பார் பரிமாறப்படுகிறது. 

தெற்கு கேரளத்தில் சில இடங்களில் சாம்பார் சாதத்தை தொடர்ந்து பாயசம் பரிமாறப்படுகிறது. மற்ற பல இடங்களில் சாம்பாரைத் தொடர்ந்து காலன் வகையைச் சேர்ந்த மோர்க்குழம்பும், புளிசேரியும் பரிமாறப்படுகின்றன. இலையில் இடப்பட்டுள்ள அவியல், ஓலன் போன்றவை இவற்றுடன் இணைத்து உண்ணப்படுகின்றன.

புளிசேரிக்குப் பிறகு பாயச வகைகள் பரிமாறப்படுகின்றன. கேரளத்தில் பாயசங்களின் அரசனாக பார்க்கப்படும் ‘அட பிரதமன்’ முதலில் பரிமாறப்படுகிறது. சத்யா விருந்தின் தலைமை பதார்த்தமாக விளங்குகிறது இந்த பாயசம். இதனைத் தொடர்ந்து ஒன்று அல்லது இரண்டு வேறு பாயச வகைகள் பரிமாறப்படுகின்றன. பழப்பாயசம், பருப்பு பாயசம், கோதுமை பாயசம் ஆகியவை இதில் அடங்கும். கடைசியாக ‘பால்பாயசம்’ பரிமாறப்படுகிறது. அரிசி, சேமியா, பால், சர்க்கரை, ஏலக்காய் சேர்க்கப்பட்ட பால்பாயசமே பெரும்பாலும் சத்யாவில் இடம் பிடிக்கிறது.

சில இடங்களில் இனிப்பு பூரணம் நிறைந்த போளியைப் பரிமாறி, அதன் மீது பால்பாயசத்தைப் பரிமாறுகின்றனர். இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து உண்ணும்போது சுவை நரம்புகள் எல்லாம் தித்திக்கும். விருந்தின் நிறைவாக கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் ஆகியவை சேர்த்த மோர் பரிமாறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ரசமும். கைகளில் வாங்கிக் கேட்டு குடிப்பது இதன் சுவையை நாக்கிற்கு எடுத்துக்காட்டும். இத்தனை சுகந்தமான, சுவையான உணவுவகைகளும் நம்மை மற்றொரு உலகிற்கு அழைத்துச் செல்லும் என்பதில் மாற்றில்லை. முடிந்தபோது கேரளத்திற்கு ஒரு ஓணம் நாளில் விசிட் அடித்து இந்த ‘சத்யா’வை வயிறும், மனதும் நிறைய ருசித்து வாருங்கள்!


 

NEXT STORY
OnamSadhya: 'உப்பேரி, காலன், ஓலன், அட பிரதமன்’ - சுகந்தமான ‘சத்யா’ விருந்து பரிமாறப்படும் முறை! Description: கேரளத்தின் குளிர்ச்சியான மலைபிரதேசத்தில் கிடைக்கும் இஞ்சி, மிளகு, கறிவேப்பிலை என உடலுக்கு வலு சேர்க்கக் கூடிய அனைத்து பொருட்களும் இந்த விருந்தில் அடக்கம்.
Loading...
Loading...
Loading...