முகத்தில் எண்ணெய் வடிகிறதா? சருமம் பளிச்சிட சிம்பிள் டிப்ஸ்

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
Updated Oct 21, 2019 | 20:02 IST | Times Now

எண்ணெயில் பொரித்த உணவுகள், இனிப்பு அதிகமுள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். மேக் அப் அதிகமாக போடுவதை தவிர்க்கவும்.

Oily Skin, Oily Face, எண்ணெய் வடியும் முகம்
எண்ணெய் வடியும் முகம்  |  Photo Credit: Getty Images

நம் முகம் பளிச்சென்று, எண்ணெய் வடியாது இருக்கவே நாம் விரும்புகிறோம். எண்ணெய் வடியும் முகம் கொண்டவர்கள் சோர்வாக காட்சி தருவதால் சங்கடமடைகிறார்கள். மேக் அப் செய்தாலும் பயனற்று போகிறது.

’சீபம்’ எனும் திரவம் சருமத்தில் சுரப்பதால் எண்ணெய் வடிவது போல் தோற்றமளிக்கிறது. சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க சீபம் உதவினாலும், அதிகமாக சுரந்தால் முகத்தை மந்தமாக மாற்றிவிடும்.

உங்கள் முகம் எண்ணெய் வடியும் தன்மை கொண்டதா என்பதை சில அறிகுறிகள் கொண்டு அறியலாம். சருமத் துளைகள், முகத்தில் பிசுபிசுக்கும் தன்மை, ’பிளாக்ஹெட்’ எனப்படும் முகத்தில் தோன்றும் கரியநிற முற்கள், முகப்பருக்கள், முரடான சருமம் ஆகியவை உங்கள் முகம் எண்ணெய் வடியும் தன்மை கொண்டதை குறிக்கலாம்.

சரிவிகித உணவு உட்கொள்வது அவசியமாகும். எண்ணெயில் பொரித்த உணவுகள், இனிப்பு அதிகமுள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும், மேக் அப் அதிகமாக போடுவதை தவிர்க்கவும். இப்பிரச்சனை நீடித்தால் மருத்துவரை அணுகவும்.

முகத்தில் எண்ணெய் வடிய காரணங்கள் என்ன

  • மரபியல்: உங்கள் குடும்பத்தில் யாருக்காவது எண்ணெய் வடியும் முகம் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்கும் அவ்வாறே இருப்பதில் ஆச்சரியம் இல்லை. ஏனெனில், இது மரபுவழியாக வர வாய்ப்புண்டு.
  • வயது: பருவ வயதினர் மற்றும் இளைஞர்களை காட்டிலும் வயதானவர்களுக்கு இப்பிரச்சனை ஏற்படும் வாய்ப்புகள் குறைவு தான். வயது கூடும் போது சருமத்தில் எண்ணெய் தன்மை குறையும்.
  • சுற்றுச்சூழல்: பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் சருமத்தை பெருமளவு பாதிக்கிறது. வெப்பமான, ஈரப்பதம் உள்ள பகுதிகளில் வசிப்போருக்கு முகத்தில் எண்ணெய் அதிகமாக சுரக்கும். அதனால் தான் குளிர்காலத்தை காட்டிலும் கோடையில் எண்ணெய் அதிகமாக சுரக்கிறது.
  • அதிகமாக முகம் கழுவுதல்: முகத்தை அதிகமாக கழுவினாலும் எண்ணெய் வடியும்.
  • ஹார்மோன் மாற்றங்கள்: ஆண்ட்ரோஜன் எனும் ஹார்மோன் தான் சருமத்தில் எண்ணெய் சுரக்கச் செய்கிறது. பருவ வயதிலும் பிரசவ காலத்திலும் இந்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும்.
  • மன இறுக்கம்: மன இறுக்கம், உடல் நலக்குறைவு காரணமாகக் கூட முகத்தில் எண்ணெய் அதிகமாக சுரக்கும்.
  • சருமத் துளைகள் விரிதல்: சருமத் துளைகள் பெரிதானால் எண்ணெய் அதிகமாக சுரக்கும். வயது கூடும்போது இப்படி ஆக வாய்ப்புண்டு.
  • குறைவான ஈரப்பதம்: சருமத்தில் ஈரப்பதம் குறைந்தால், சருமம் வறண்டு விடும். இதனால் எண்ணெய் அதிகம் சுரக்கும்.

முகம் பளிச்சிட இயற்கை வைத்தியம்

  1. முட்டையின் வெள்ளைக் கரு: புரதம் மற்றும் வைட்டமின்கள் அதிகமுள்ள முட்டையின் வெள்ளைக் கரு, சருமத்தை சுத்தம் செய்வதுடன் இறுக்கப்படுத்தும். முட்டையின் வெள்ளைக் கருவை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். வாரம் இருமுறை இதனை செய்யலாம்.
  2. தேன்: முகத்தை ஈரப்பதத்துடன் வைக்க தேன் உதவும். மேலும், முகப்பருக்கள் வராது தடுக்கும். சருமத் துளைகளை திறந்து மிகுதியாக உள்ள எண்ணெயை நீக்கிவிடும். தேனை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும்.
  3. கற்றாழை சருமத்தை குளிரூட்டும். சருமத் துளைகளை குறைப்பதால் எண்ணெய் சுரப்பது குறையும். கற்றாழை கூழ் எடுத்து சிறிது நேரம் குளிரவைத்து பிறகு முகத்தில் தடவுங்கள். 30 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள்.
  4. எலுமிச்சை: வைட்டமின் சி கொண்ட எலுமிச்சையில் பாக்டீரியாவை எதிர்க்கும் தன்மை உள்ளது. இதனால் முகத்தில் எண்ணெய் வடிவதை தடுக்க எலுமிச்சை உதவுகிறது. எலுமிச்சை சாறை நீருடன் கலந்து, பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி 20-30 நிமிடங்கள் விட்டு கழுவி விடவும்.
  5. தக்காளி இறந்த சரும அணுக்களை அகற்றி மிகுதியான எண்ணெயை இழுத்துக் கொள்கிறது. இரண்டாக வெட்டிய தக்காளியை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும்.
  6. ஓட்ஸ் அதிகப்படியான எண்ணெயை உரிந்து, முகத்தை சுத்தப்படுத்தி, ஈரப்பதத்துடன் வைக்கும். ஓட்ஸை தண்ணீருடன் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும்.

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட பரிந்துரைகள் அனைத்தும் பொது பயன்பாட்டிற்கானவை. அவை யாவும் மருத்துவ ஆலோசனையாக கருதப்படக் கூடாது. மருத்துவம் சார்ந்த கேள்விகள் அல்லது சந்தேகங்களுக்கு உங்கள் மருத்துவரை அணுகவும்.

NEXT STORY