பாதவெடிப்பு பிரச்னையா? - வீட்டிலேயே இருக்கு தீர்வு!

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
Updated Oct 30, 2019 | 19:15 IST | Times Now

சருமத்தில் ஈரப்பதம் குறைவதால் விரிசல் ஏற்பட்டு பாதவெடிப்பு உண்டாகிறது. பாதவெடிப்பு தீவிரமடைந்தால் பாக்டீரியா அல்லது ஃபங்கஸ் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

Cracked Heels, பாதவெடிப்பு
பாதவெடிப்பு  |  Photo Credit: Getty Images

பாதவெடிப்பு என்பது அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாகும். குறிப்பாக, பெண்களுக்கு அதிகமாக பாதவெடிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. பாதவெடிப்பு ஏற்படுவதால் விரும்பிய காலணிகளை அணிய முடியாமல் அவதிப்படும் நிலை உருவாகிறது.

பாதங்களை சரியாக பராமரிக்காததன் காரணமாகவே பாதவெடிப்பு ஏற்படுகிறது. குதிகாலில் ஏற்படுவதால் இதனை குதிகால் வெடிப்பு என்றும் கூறலாம். சருமத்தில் ஈரப்பதம் குறைவதால் விரிசல் ஏற்பட்டு பாதவெடிப்பு உண்டாகிறது. பாதவெடிப்பு தீவிரமடைந்தால் பாக்டீரியா அல்லது ஃபங்கஸ் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

பாதவெடிப்பு அசௌகரியம் தருவதுடன், வலி மற்றும் ரத்தக்கசிவு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. பாதவெடிப்பு ஏற்பட பல காரணங்கள் உண்டு. அவற்றை கீழ்வருமாறு காணலாம்:

  • ஈரப்பதம் குறைவு
  • வைட்டமின், மினரல் சத்துக்கள் குறைபாடு
  • நீண்ட நேரம் நிற்பது
  • வயது கூடுதல்
  • சொறிநோய், தைராய்டு, நீரிழிவு
  • சரியான காலணி அணியாதது
  • மரபியல்
  • உடற்பருமன்

பாதங்களில் ஈரப்பதத்தை பாதுகாத்து பாதவெடிப்பு ஏற்படாமல் தடுக்கும் சில பொருட்களை தற்போது காணலாம்:

  1. மவுத்வாஷ்: ஆல்கஹால் இருப்பதால் கால்நகங்களை சுத்தப்படுத்த மவுத்வாஷ் உதவும். வறண்ட சருமத்தை மிருதுவாக்கவும் உதவும். நீரில் மவுத்வாஷை கலந்து, அக்கலவையில் 15-20 நிமிடங்கள் பாதங்களை ஊறவைக்கவும். பிறகு pumice stone எனப்படும் நுரைக்கல் கொண்டு இறந்த சரும அணுக்களை அகற்றலாம்.
  2. வாழைப்பழம்: வைட்டமின் ஏ உள்ள வாழைப்பழம் சருமத்தின் நீளும் தன்மையை மற்றும் ஈரப்பதத்தை பாதுகாக்க உதவும். வாழைப்பழத்தை மசித்து பாதங்களில் தடவி 20 நிமிடங்கள் விட்டு கழுவலாம்.
  3. தேன்: இயற்கையான கிருமிநாசினியாக தேன் செயல்படுகிறது. பாதவெடிப்பை குணமாக்க உதவுவதோடு, சருமத்திற்கு புத்துணர்ச்சி ஊட்டுகிறது. தேன் கலந்த வெதுவெதுப்பான நீரில் பாதங்களை ஊறவைத்து 20 நிமிடங்கள் கழித்து அலம்பவும்.
  4. வாஸ்லின், எலுமிச்சை: வறண்ட சருமத்திற்கு ஈரப்பதம் கூட்ட வாஸ்லின் உதவும். புதிய சரும அணுக்கள் உற்பத்தியாக எலுமிச்சை சாறு உதவும். இரவில் வாஸ்லின் மற்றும் எலுமிச்சை சாறை கலந்து பாதங்களில் தடவி, உடற்சூடு வெளியேறாமல் தடுக்க கம்பளியால் ஆன காலுறை அணிந்து தூங்கவும். காலை எழுந்தவுடன் பாதங்களை கழுவி விடவும்.
  5. கற்றாழை: இரவில் கற்றாழையைப் பாதங்களில் தடவி, காலுறை அணிந்து தூங்கவும். காலை எழுந்து பாதங்களை கழுவவும். தொடர்ந்து 4-5 நாட்கள் இப்படி செய்து வர, வறண்ட பாதங்கள் மிருதுவாகும்.
  6. சமையல் சோடா: சருமம் மிருதுவாக சமையல் சோடா உதவும். சமையல் சோடா கலந்த வெந்நீரில் 15 நிமிடங்கள் பாதங்களை ஊறவிடவும். பிறகு, நுரைக்கல் கொண்டு பாதங்களை தேய்த்து சுத்தமான நீரில் கழுவவும்.
NEXT STORY