Dinosaur: ’டிரெக்ஸ்..டிப்லோடோகஸ்’ - எண்ணிலடங்கா டைனோசர் வகைகளின் வளர்ச்சியும், வீழ்ச்சியும்!

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
Updated Mar 27, 2019 | 10:55 IST | Times Now

Dinosaur: பிரமாண்டமான அளவில் சுற்றித்திரிந்த டைனோர்சர்களின் வாழ்க்கை வரலாறு இன்று நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தொன்மம். 

dinosaur, டைனோசர்கள்
டைனோசர்கள் வாழ்ந்த காலம் - மாதிரிப்படம்  |  Photo Credit: Getty Images

சென்னை: டைனோசர்ஸ்...ஆதி உலகில் வாழ்ந்த பூர்வகுடி மிருகம்....ஹாலிவுட் மார்க்கெட்டில் ஸ்டீவன் ஸ்பீல்ஸ்பெர்க்கால் அறிமுகப்படுத்தப்பட்ட அட்டகாசமான கதாப்பாத்திரம். 

1993ம் ஆண்டு தொடங்கி இந்த ஆண்டின் தொடக்கம் வரை கற்பனை ஜீவராசியாக ஜூராசிக் பார்க்கில் வலம் வந்து கோடிகளைக் குவித்த இந்த விலங்கு, 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய உலகில் உயிரும், உடலுமாக வாழ்ந்த நமது மூத்தகுடி என்பது வரலாறு சொல்லும் உண்மை. 

பாசில்களாகவும், எலும்புகளாகவும் மட்டுமே இன்று மனிதர்களுக்கு காணக்கிடைக்கும் மனிதர்களின் எள்ளு கொள்ளு கோதுமை தாத்தாவான டைனோசர்களின் வகைகள் ஏராளம். 

பிரமாண்டமான அளவில் சுற்றித்திரிந்த டைனோர்சர்களின் வாழ்க்கை வரலாறு இன்று நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தொன்மம். 

மில்லியன் ட்ரில்லியன் எண்ணிக்கையைத் தொடும் மனிதர்களின் பரிணாம வளர்ச்சியைப் போன்றே காணப்பட்ட டைனோசர்களின் இனம் அழிந்தது எப்படி? தடயங்களை மட்டுமே நமக்கு விட்டுச் சென்ற டைனோசர்கள் போன்றதுதான் ஒருநாள் புவியில் மனிதர்களின் நிலையும் மாறுமா? ஒட்டுமொத்த மனித இனத்தின் அழிவு சாத்தியமா? இந்த கேள்விகளின் உருவாக்கத்திற்கு மூலகாரணமாகவிருக்கும் டைனோசர்களின் வாழ்க்கை வரலாறு மிக நுட்பமானது; சுவாரசியமானது. 

மிக முக்கியமாக உலகில் பல்கிப் பெருகியிருந்த டைனோசர்களின் இனத்தின் அழிவிற்கு முக்கிய காரணமாக பிரிட்டன் ஆய்வாளர்களால் நம்பப் படுவது அவற்றின் பல்கிப் பெருகிய வளர்ச்சி. ஏனெனில், பூமியின் இண்டு இடுக்கெல்லாம் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த டைனோசர் இனங்கள், இனக்குழுக்களாக ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்ளத் தொடங்கின என்கின்றனர் ஆய்வாளர்கள்.

விண்கற்களாலேயே டைனோசர்கள் அழிந்தன என்கிற கூற்று ஒருபுறமிருந்தாலும், ‘வளர்ச்சியே வீழ்ச்சி’ என்பதுதான் டைனோசர் சகாப்தமே வீழ்ச்சியடைந்த வரலாற்றுப் புள்ளி.

தென் அமெரிக்காவில் தோன்றிய இந்த இனம், தெரோபாட் (theropod) டைனோசர்களில் ஒன்றான டி-ரெக்ஸ் எனப்படும் டைனோசர்களின் ராஜாவான டைரனோசுரஸிலிருந்து நீண்ட கழுத்துக்களை உடைய டிப்லோடோகஸ், முட்கள் நிறைந்தது போன்ற உடல்வாகு கொண்ட ஆங்கிலோசோரஸ், தண்ணீரில் வாழக்கூடிய ப்ளிசியோசோரஸ் என ஹெர்பிவோரஸ், ஆம்னிவோரஸ் உணவுப்பழக்கத்துடன் நூற்றுக்கணக்கான விந்தையான உரு கொண்ட டைனோசர்கள் தோன்றின.

 முழு கிரகத்தையுமே நிரப்பிவிடும் வேகத்துடன் பல்கிப் பெருகின. இது கிட்டதட்ட இன்று மனித இனக்குழுக்கள் பல்கிப் பெருகி, அடித்துக் கொண்டு இறப்பதை போலானதாகத்தான் வகைப்படுத்தப்படுகிறது.

’மாபெரும் அழிவு’க்கு உட்பட்டிருந்த பூமியில் எல்லா பாகங்களையும் ஆக்கிரமித்துக் கொள்வது டைனோசர்களுக்கு எளிதான ஒன்றாக இருந்தது. இதனால், இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளாத பறவை இன டைனோசர்கள் தவிர மற்ற இனங்களுக்கு இதுதான் மரணத்திற்கான ஆரம்பப்படிநிலையாக இருந்துள்ளது. 

’க்ரிடோஸ்’ அதாவது 135 மில்லியன் ஆண்டுகள் முதல் 63 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புவரையில், டைனோசர்கள் தொடர்ந்து பரிமாண வளர்ச்சியின் உச்சத்தை அடைந்தனவாம். இது அவற்றின் காலமுடிவு வரை தொடர்ந்துள்ளது.

ஏற்கனவே அழிவின் விளிம்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த டைனோசர்களுக்கு, விண்கல் மற்றொரு பேராபத்தாக அமைந்தது. ’சிக்ஸ்குலப்’ என்று பெயரிடப்பட்ட அந்த விண்கல் 14 கிலோமீட்டர் அளவு பெரியது. கிட்டதட்ட மணிக்கு 89 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து மெக்ஸிகோ வளைகுடா அருகே பூமியில் மோதியுள்ளது.

இதனால், அங்கு 100 மீட்டர் உயரத்துக்கும் அதிகமான அலைகள் கடலில் ஏற்படத்தொடங்கின. வெறும் 24 மணிநேரத்தில் பல்கிப் பெருகிய அந்த அதிர்வு அட்லாண்டிக், மத்திய அமெரிக்க கடவழிப் பகுதியை அடைந்தது. இந்த வழிப்பாதை இப்போது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தெற்கு பசிபிக், வட அட்லாண்டிக் பகுதிகளிலும் இதனால் அதிகபட்ச அளவாக கிட்டதட்ட 14 மீட்டர் அளவிற்கு அலைகள் உயர்ந்தன. இதனால் ஏற்பட்ட நில அதிர்வு, பூமியைச் சூடாக்கி, சூடான எரிமலைகளையும், தூசையும் கிளப்பியுள்ளது. காட்டுத்தீயும் பற்றி எரியத்தொடங்க புல், பூண்டு, மரம் தொடங்கி எல்லா உயிர்களும் அழியத்தொடங்கின. அவற்றின் படிமங்கள்தான் இக்கதைகளை நமக்கு உணர்த்தியுள்ளன.  இதற்கு ‘ஒன் - டூ பஞ்ச்’ விளைவு என்று பெயரிட்டுள்ளனர் அறிவியலாளர்கள்.

அழிவு ஒருபுறம் இருக்கட்டும். டைனோசர்களை மையமாக வைத்து ‘ஜூராஸிக் பார்க்’ திரைப்படங்கள் நம்மை மகிழ்வித்தது போலவே டைனோசர்கள் குறித்தான சில சுவாரசியமான தகவல்களும் வரலாற்றின் பக்கங்களில் நிரம்பிக் கிடக்கின்றன.

*கடந்த 2017ம் ஆண்டில் ஸ்பெயின் நாட்டின் காஸலான் மாகாணத்தில் அமைந்திருக்கும் புராதன நகரங்களில் ஒன்றான மொராலியாவில் கிட்டதட்ட 20 மீட்டர் நீளமுள்ள டைனோசர் ஒன்றின் எலும்புகள் கண்டறியப்பட்டன. அதில் மொத்தம் 80 எலும்புகளைக் கண்டறிந்தனர் ஆய்வாளர்கள்.

அந்த எலும்புகள், ‘பிராக்கியாரஸ்’ எனும் பேரின வகையைச் சேர்ந்த சாரோபாட் வகை டைனோசர் ஒன்றின் எலும்புகள் என வகைப்படுத்தப்பட்டன. நீண்ட கழுத்துள்ள ஹெர்பிவோரஸ், அதாவது தாவர பட்சிணி டைனோசர்கள் இவை.  அதுமட்டுமல்ல, பூமியில் வாழ்ந்த எச்சங்களை அதிகமாக கொண்டுள்ள வகையும் இந்த ‘சரோபாட்’ டைனோசர் இனம்தான். 

*டைனோசர்கள் வாழ்ந்த கண்டம் ‘பாஞ்சியா’ என்று அழைக்கப்படுகிறது. அக்காலகட்டத்தில் கண்டங்கள் பெரும்பான்மையாக பிரிவடையாமல் இருந்தனவாம். ‘பயங்கரமான பற்களைக் கொண்ட பல்லி’ என்கிற அர்த்தம் தொனிக்க டைனோசர் என்கிற பெயரினை ரிச்சர்ட் ஓவன் என்கிற இங்கிலாந்து அறிவியலாளர் 1842ம் ஆண்டில் இவற்றிற்குச் சூட்டினார். பொதுப்பெயராக இது அமைந்து போனாலும், அழகான குட்டி டைனோசர்களும் இதில் அடக்கம்தான். 

*தமிழகத்திலும் டைனோசர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. ஒருவகையான டைனோசருக்கு ‘திராவிடோசோரஸ்’ என்கிற பெயர் இருந்தது கூட அதன் காரணமாக இருக்கலாம். 

*ஆம்னிவோரஸ் வகையைச் சேர்ந்த பிற விலங்குகளை உண்ணும் டைனோசர்களில் மிகப்பெரியது ‘ஸ்பைனோசாரஸ்’தான். இது கிட்டதட்ட 20 டன் எடையும், ஐந்துமாடிக் கட்டிடம் அளவிற்கும் உயர்ந்ததாம். 

*டைனோசர்களை கண்டறிந்ததே பிரம்மன் தான் என்கிறார் பஞ்சாப் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர். அஷு கோஸ்லா என்னும் இந்த பேராசிரியர், வேதத்தில் பிரம்மன் டைனோசர்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் கண்டறியப்பட்ட ஒரு வகை டைனோசருக்கு ‘ராஜசுரஸ்’ என்று பெயரிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

*சீனாவில் 16 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக பல வண்ணங்களால் ஆன இறகுகளைக் கொண்ட கழுத்துப் பகுதி உடைய டைனோசர்கள் வாழ்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தற்காலத்திய பறவை இனங்களுக்கு மூதாதையராக கருதப்படும் பறக்கும் வகை டைனோசர்களைச் சேர்ந்த இதற்கு ‘சியாங் ஜூஜி’ என்று சீன மொழியில் பெயர் சூட்டியுள்ளனர். அதற்கு ‘வானவில் போன்ற வண்ணங்களைக் கொண்ட’ டைனோசர் என்பது பொருளாம்.

*இன்று பனியால் உறைந்து போயிருக்கு அண்டார்டிகா பகுதியிலும் டைனோசர்கள் உலாவியிருக்கின்றன. 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான ‘கிரிட்டாஸியஸ்’ காலத்தில் அண்டார்டிகாவில் பனிகட்டிகள் இல்லாமல் காடாக இருந்துள்ளது. அக்காலகட்டத்தில் அங்கு டைனோசர்கள் வாழ்ந்துள்ளனவாம். 

*71 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த டைனோசர்கள் போன்ற மிகப்பெரிய உருவமைப்பு கொண்ட ‘க்யூரி அல்பர்டா கண்டர்’ என்கிற பறவையினத்தின் படிமத்தினைக் கண்டறிந்துள்ளனர் கனட நாட்டு ஆராய்ச்சியாளர்கள். இது ‘ட்ரோடான்’ குடும்பத்தைச் சேர்ந்த ஆனால், மண்டை ஓட்டில் சிறியளவிலான மாறுபாடுகள் கொண்ட பறவையினமாம். கனடாவின் ரெட் டீர் பள்ளத்தாக்கில் இதன் படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

*அமெரிக்காவின் கொலரோடோ மாகாணத்தில் ‘மோரிசன் ஃபாசில் ஏரியா நேஷனல் லேண்ட்மார்க்’ என்கிற பூங்கா அமைந்துள்ளது. இங்கு இயற்கையாகவே 1.5 மைல் தூரத்திற்கு பதிந்து போயிருக்கும் 15 நிஜ டைனோசர்களின் படிமங்களை நாம் தொட்டுணர முடியும். அபடோசாரஸ், ஸ்டெகசாரஸ், அல்லோசாரஸ், டிப்லோடோகஸ் ஆகிய டைனோசர்களின் படிமங்களாம் இவை. மேலும், 1937ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட சாய்வான பாறைகளில் தாவரங்களை மட்டுமே உண்டு வாழ்ந்த ‘இகுவானோடன்’ என்கிற டைனோசரின் காலடித்தடங்கள் புதைபடிமங்களாகப் பதிந்துள்ளது. 

மனிதனின் வளர்ச்சிக்கு சற்றும் குறையாத இந்த டைனோசர்களின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் நமக்கொரு பாடம்!

NEXT STORY
Dinosaur: ’டிரெக்ஸ்..டிப்லோடோகஸ்’ - எண்ணிலடங்கா டைனோசர் வகைகளின் வளர்ச்சியும், வீழ்ச்சியும்! Description: Dinosaur: பிரமாண்டமான அளவில் சுற்றித்திரிந்த டைனோர்சர்களின் வாழ்க்கை வரலாறு இன்று நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான தொன்மம். 
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola