முன்னாள் காதலியுடன் மீண்டும் காதலா? - வேண்டாம் ஆண்களே...

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
Updated Oct 29, 2019 | 18:23 IST | Times Now

இது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் பொருந்தும்.

Falling in love with you ex, பழைய காதலியுடன் மீண்டும் காதல்
பழைய காதலியுடன் மீண்டும் காதல்  |  Photo Credit: Getty Images

’பிரேக் அப்’ செய்வது வேதனை தரும் என்றால், பழைய காதலியை மீண்டும் சந்திப்பது அதைவிட அதிக வேதனை தருவதாக இருக்கும். சில சமயங்களில் பழைய காதலியுடன் மீண்டும் பழகும் நிர்பந்தம் ஏற்படலாம். நீங்கள் பணிபுரியும் இடத்தில் உங்கள் முன்னாள் காதலியும் வேலைக்கு சேரலாம். இது போன்ற தவிர்க்க முடியாத சூழலில் நாம் எந்த அளவுடன் பழக வேண்டும் என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை. இது ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் பொருந்தும்.

பழைய காதலியுடன் மீண்டும் காதலில் விழ அதிக வாய்ப்புண்டு. பழைய காதலியை காணும் போதெல்லாம் முன்னர் இருந்தது போலவே ஒரு சந்தோஷமான காதலை மீண்டும் அனுபவிக்க மனம் ஏங்கும். ஆனால், பழைய காதலியை மீண்டும் காதலிக்க நினைப்பது, நீர் வற்றிய பழைய கிணற்றில் நீச்சலடிக்க ஆசைப்படுவது போன்றதாகும்.

காதலர்களாக இல்லாமல் வெறும் நண்பர்களாக இருக்கலாம் என்று உங்கள் காதலி விருப்பமனு அளித்தாலும், அதனை பரிசீலனை செய்யும் முன் இந்த 5 விஷயங்களை நினைவில் கொள்ளவேண்டும்.

மீண்டும் காதல் வேண்டாம்
நீங்களும், உங்கள் பழைய காதலியும் வெறும் நண்பர்களாகவே இருக்க நினைத்தாலும், ஏதாவது ஒரு கட்டத்தில் காதல் மீண்டும் மலர்ந்தே தீரும். கைகுலுக்கி தொடங்கும் நட்பானது, காதலில் சென்று முடியும். ஏற்கனவே நொறுங்கிப் போன மனதை மீண்டும் நோகடிக்க வேண்டுமா?

அவநம்பிக்கை​
பழைய துயரிலிருந்து மீளவே நெடுங்காலம் எடுத்துக்கொண்ட நீங்கள், மனதில் இன்னமும் அந்த வடுவை சுமந்துள்ளீர்கள். இந்நிலையில், மீண்டும் பழைய காதலியுடன் சேர்வது உங்கள் கண்களை முற்றிலுமாக மறைத்துவிடும். பரந்து விரிந்த இந்த உலகை அனுபவிக்க விடாமல், சிறு கூண்டிற்குள் உங்களை அடைத்துவிடும்.

மனநலம்
பழைய காதலியுடன் சேர்ந்தால் சண்டைக்கு பஞ்சமே இருக்காது. ஏற்கனவே அவரால் அதிகம் காயப்பட்ட நீங்கள் தற்போது உங்கள் மன உறுதியை முற்றிலுமாக இழந்து, நீரில்லா காட்டிற்குள் விடப்பட்டவர் போல செய்வதறியாது திரிவீர்கள்.

சண்டை
கருத்து வேறுபாடுகள் மிகச் சுலபமாக சண்டையில் சென்று முடியும். அந்த சண்டையில், பழைய கசப்பான சம்பவங்களை மீண்டும் கிளறுவீர்கள். எதை மறக்க நினைத்து, ஓரளவு மறந்தும் வாழ்ந்து வந்தீர்களோ, அந்த நினைவுகள் மிண்டும் உங்களை வருத்தத் தொடங்கும்.

மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி
பழைய சந்தோஷத்தை நாடி உங்கள் பழைய காதலியுடன் மீண்டும் பழகினால், இருக்கின்ற சந்தோஷத்தையும் இழந்துவிடுவீர்கள். கடந்த காலம் ஒருபோதும் திரும்பாது. பழையன கழிதலும், புதியன புகுதலும் தான் இயற்கையின் நியதி. எனவே, முன்னாள் காதலியை மறுபடியும் சந்திக்க நேர்ந்தால் சாமர்த்தியமாக நழுவிச் செல்வது தான் உங்களுக்கும் நல்லது, அவரும் நல்லது.

NEXT STORY