AmazingVillages: 'கதவில்லாத கிராமம்..சுத்தமான கிராமம்’ - விநோதமான இந்திய கிராமங்கள்!

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
Updated Apr 01, 2019 | 15:12 IST | Times Now

சாலைவசதி, மருத்துவ வசதி, கல்வி ஆகியவற்றிற்காக போராடும் கிராமப்புற மக்கள் குழந்தைகளுடன் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ப்புறங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.

indian villages, இந்தியக் கிராமங்கள்
கிராமம் - மாதிரிப்படம்  |  Photo Credit: Getty Images

சென்னை: இந்தியா..உலகமே ஒரு ‘குளோபல் வில்லேஜ்’ ஆக மாறிப்போயுள்ள காலகட்டத்திலும் ஆயிரமாயிரம் கிராமங்களை உயிர்நாடியாக தன்னகத்தே கொண்டுள்ள நாடு.

மகாத்மா காந்தியடிகள் கூறியதுபோல, இன்றும் நாட்டின் முதுகெலும்பாக கிராமங்களே செயல்படுகின்றன. அத்தகைய ஆச்சரியம் மிகுந்த கிராமங்கள் இன்றும் இந்தியாவை வாழவைத்துக் கொண்டிருக்கின்றன.

மழையின்மை, நிலங்களெல்லாம் கான்க்ரீட் காடுகளாக மாறிவருகின்ற நிலையிலும் கிராமங்களே பொருளாதார வளர்ச்சிக்கு ஜீவ நாடியாக செயல்படுகின்றன.  

சாலைவசதி, மருத்துவ வசதி, கல்வி ஆகியவற்றிற்காக போராடும் கிராமப்புற மக்கள் குழந்தைகளுடன் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ப்புறங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். எனினும், கிராமப்புற மக்கள் நமது பண்பாட்டு பெருமையையும், நற்பண்புகளையும், கலாச்சார பெருமைகளையும் பாதுகாத்து வருகின்றனர். 

இன்றைய மாடர்ன் காலகட்டத்திலும் அத்தகைய பண்பாடுகளைப் பின்பற்றி வரும் சில ஆச்சரிய கிராமங்களைப் பற்றிய தொகுப்பு இது.

கதவுகளே இல்லாத கிராமம்:

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அமைந்துள்ளது பாப்பணம் என்கிற கிராமம். கடந்த மூன்று தலைமுறைகளாக இந்த கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு கதவுகளே கிடையாது. மீறிக் கதவு வைத்து வீடுகளை அமைத்தால் கடவுளை அவமதித்தது போலாகும் என்கின்றனர் ஊர்மக்கள்.

வெளியூருக்குச் செல்லும் குடும்பத்தினர் வாசலுக்கு மேலுள்ள சிறு சன்னல்களில் நூலைக் கட்டி அதில் திரைபோன்ற துணியை மறைப்பாகக் கட்டி தொங்க விடுகின்றனர். அது காற்றில் பறந்து விடாமல் இருக்க கீழே நான்கு ஐந்து செங்கற்களை வைத்துவிடுகின்றனர். இதனால், நாய், கோழி, மாடு போன்றவை உள்நுழையாதாம். 

ஆனால், திருடன் உள்நுழைந்தால்? என்று நீங்கள் கேட்கலாம். பாப்பணம் கிராமத்தில் இதுவரை பகலிரவு என எந்த நேரங்களிலும் எவ்விதமான பொருளும் களவு போனதில்லை என்கின்றனர் மக்கள். எல்லோரிடமும் நேர்மை இருப்பதே இதற்கு காரணம் என்கின்றனர்.  இவ்வூரில் வழிபடப்படும் காவல் தெய்வங்களுக்கும் கோயிலில் கதவு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வூரின் முனியசாமிதான் ஊரில் களவு போகாமல் பாதுகாக்கும் காவல் தெய்வமாம். 

இதே போன்று மகாராஷ்டிர மாநிலம் சனி சிக்னாபூர் கிராமத்திலும் வீடுகளுக்கு கதவுகளே கிடையாது. மேலும், வங்கிகளிலும் லாக்கரே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

கடவுளின் தோட்டம்: 

’கடவுளின் தேசம்’ கேரளம் என்பது போல ‘கடவுளின் தோட்டம்’ என்கிற செல்லப்பெயரைப் பெற்றுள்ளது மேகாலயா மாநிலத்தின் ‘மாவ்லின்னாங்’ கிராமம். ஷில்லாங்கிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த இயற்கை எழில் சூழ்ந்த கிராமம், 2003ம் ஆண்டிலிருந்து இன்று வரை ’ஆசியக் கண்டத்தின் சுத்தமான கிராமம்’ என்கிற விருதை தன்னகத்தே தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இங்குள்ள பள்ளிகளில் ஆங்கிலம், கணிதம் போல ‘சுத்தம்’ என்பதும் ஒரு பாடமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது. எங்கே குப்பையிருந்தாலும், இக்கிராமத்தில் உள்ள 95 குடும்பங்களைச் சேர்ந்த 500 பேரில் யார் வேண்டுமானாலும் பாரபட்சமின்றி கையில் விளக்குமாற்றைப் பிடித்து சுத்தம் செய்யத் தொடங்கி விடுகின்றனர். 

தீபாவளி கொண்டாடாத கிராமங்கள்:

சிவகங்கை மாவட்டம், சிங்கபுணரி ஊராட்சிக்குட்பட்ட ஏரியூர் கிராமத்தைச் சுற்றியுள்ள ஒப்பிலாப்பட்டி, தும்பைபட்டி, எருமைப்பட்டி, சத்திரப்பட்டி, இடையப்பட்டி, கிலுகிலுப்பைப்பட்டி, கலிங்கப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் ‘மயில்ராயன் கோட்டை நாடு’ என்று அழைக்கப்படுகின்றன. இவற்றிற்கு தலைமைக் கிராமமாக கட்டாணிப்பட்டி என்கிற கிராமம் உள்ளது. கடந்த 55 ஆண்டுகளாக இந்த கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக தீபாவளியே கொண்டாடுவது கிடையாதாம். இது அங்கு ஊர்க்கட்டுப்பாடு. விவசாயத்தை முக்கிய தொழிலாளாகக் கொண்ட இந்த பகுதி மக்கள் ஒரு காலகட்டத்தில் வறுமை, பசி, பட்டினியில் வாடினர். 

அப்போதும் வசதியானவர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கி தீபாவளி கொண்டாடியுள்ளனர். ஆனால், கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் நெல் மூட்டைகளைக் கொடுத்து கடனை அடைத்துள்ளனர்.  இதனால், அவர்களுடைய தலைவர் அத்தனை கிராம மக்களையும் திரட்டி ஊர்க்கூட்டம் நடத்தி, தீபாவளி வரும் மாதங்களான அக்டோபர், நவம்பரில் விவசாயப் பணி நடைபெறுவதால் அதில் முன்னேற தீபாவளி கொண்டாடுவதில்லை என்று கட்டுப்பாடு விதித்தார். அது இன்றுவரை மதிக்கப்பட்டு வருகின்றது. அதனால் இவ்வூர் புதுமணத்தம்பதிகளுக்கு தலைதீபாவளியும் கிடையாதாம்.  ஆனால், விவசாயத்தைக் கொண்டாடும் பொங்கல் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர். 

வை-பை, ஏசி இருக்கும் அசத்தல் கிராமம்:

குஜராத் மாநிலத்தில் உள்ள புன்சாரி என்கிற கிராமத்தில் மினிபஸ் தொடங்கி, வை-பை, கண்காணிப்பு கேமராக்கள், ஏசி வகுப்பறைகள் என எல்லா வகையான வசதிகளும் இருக்கின்றன. கிராமத்தினரின் சொந்த உழைப்பிலும், நிதியிலும் இந்த வசதிகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பறவைகளை காதலிக்கும் கிராமம்: 

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள கிராமம் காக்ரிபெல்லூர். இவ்வூரில் பறவைகளுக்கு மனிதர்கள் அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அரிய வகைப் பறவைகளை நேசிப்பதோடு, அவை வசிக்கவும் இந்த மக்கள் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்துள்ளனர். மேலும், காயமடைந்து வரும் பறவைகளுக்கு இக்கிராமத்தினர் சிறப்பு சிகிச்சையும் அளிக்கின்றனர். 

ஓலைக்குடிசைகளுடன் ஒரு கிராமம்:

தாரமங்கலத்திற்கு அருகில் அமைந்துள்ளது தொட்டியனூர் கிராமம். இக்கிராமத்தில் நாயக்கர்கள் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தை வந்தடைந்த ‘தொட்டிய நாயக்கர்’ என்னும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அக்கிராமத்திற்குள் தலைவர் அனுமதியின்றி யாரும் நுழைய முடியாது. தொட்டியனூர் கிராமம் முழுவதும் ஓலைக்குடிசைகளே காணப்படுகின்றன. திருமணச் சடங்குகள் எல்லாமே இவ்வூரில் ஊர்த்திருவிழா போலவே நடைபெறுகிறது.

 ஒரே சமயத்தில் 10, 15 ஜோடிகளாகத்தான் திருமணம் முடிக்கின்றனர். திருமணங்கள் செவ்வாய்க்கிழமைகளில் மட்டுமே நடைபெறுகின்றன. ஆண்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை விட, பெண்களுக்கு மிகக்குறைவு. மேலும், பெண்கள் இக்கிராமத்தில் ஜாக்கெட் அணிவதில்லை. அப்படி ஜாக்கெட் போடும் குடும்பங்களுடன் இவர்கள் பழக்கம் வைத்துக் கொள்வதில்லையாம். ஆனால், செல்போன், டிவி போன்ற வசதிகளை மட்டும் பயன்படுத்துகின்றனர். 

100 சதவீதம் படித்தவர்கள்:

கேரள மாநிலத்தில் அமைந்துள்ள பொத்தானிக்காடு கிராமம் படித்தவர்களை குடிகளாகக் கொண்டுள்ளது. இந்தியாவிலேயே 100 சதவீதம் எழுத்தறிவை எட்டிய முதல் கிராமம் இதுதானாம். 


 

NEXT STORY
AmazingVillages: 'கதவில்லாத கிராமம்..சுத்தமான கிராமம்’ - விநோதமான இந்திய கிராமங்கள்! Description: சாலைவசதி, மருத்துவ வசதி, கல்வி ஆகியவற்றிற்காக போராடும் கிராமப்புற மக்கள் குழந்தைகளுடன் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ப்புறங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola