வார்லி, கலம்காரி முதல் தஞ்சாவூர் ஓவியம் வரை... இந்தியாவின் பாரம்பரிய ஓவியங்கள்!

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
Updated Apr 01, 2019 | 15:22 IST | விபீஷிகா

இன்றும் நம் கண்முன்னே விரிந்துகிடக்கும் இந்தியாவின் பாரம்பரிய ஓவியக் கலைகளின் தொகுப்புதான் இது.

 indian folk paintings
இந்தியாவின் பாரம்பரிய ஓவியங்கள்  |  Photo Credit: Getty

இந்தியாவின் பாரம்பரிய கலைகள் பலவும் இன்று நம்மிடம் இல்லை. மற்ற நாடுகளில் படையெடுப்பு, தலைமுறைகள் விட்டுச்சென்றது என பல காரணங்கள். ஆனால் இவற்றெயெல்லாம் தாண்டி இன்றும் நம் கண்முன்னே விரிந்துகிடக்கும் பாரம்பரிய ஓவியக் கலைகளின் தொகுப்புதான் இது.

மதுபானி:

இந்த வகை ஓவியம் நேபாளில் தோன்றியிருக்கக்கூடும் என்று வரலாறு கூறுகிறது. 1930 களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைக் காண அப்போதிருந்த ஆங்கிலெயர்கள் நேபாளுக்குச் சென்றபோதுதான் இந்த ஆச்சரியத்தைக் கண்டிருக்கிறார்கள். அங்கே இடிபாடுகளில் சுவர்களில் இந்த ஓவிங்கள் மட்டும் தனியே தெரிய அதனைப் பார்த்து வியந்து ஆங்கிலேயர்களே உலகுக்கு இந்த மதுபானியைப் பற்றிய புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார்கள். இயற்கையின் வண்ணங்களைக் கொண்டு, பெண்கள் தங்கள் வீடுகளை விசேஷ தினங்களில் அலங்கரிக்க இந்த மதுபானி ஓவியத்தை வரைந்திருக்கிறார்கள். பெரும்பாலும் கடவுள் முகங்கள், திருமண நிகழ்ச்சிகள, துளசி மாடம் போன்றவற்றை வரைந்திருக்கிறார்கள். வீட்டுச் சுவர்களை அலங்கரிக்கத் தொடங்கிய இந்த ஓவியம் தற்போது துணிகளில் மின்னுகிறது.

முகலாயர் ஓவியம் /மினியேச்சர்:

16 ஆம் நூற்றாண்டில் ஹுமாயூன் பெர்ஷியா சென்றபோது அங்கு இந்த ஓவியத்தால் கவரப்பட்டு இந்தியாவுக்கு இரண்டு ஓவியர்களை அழைத்து வந்து இந்தியாவுக்கு இந்த ஓவியபாணியை அறிமுகம் செய்திருக்கிறார். இந்த வகை ஓவியங்களை மினியேச்சர் என்றும் கூறுவார்கள். ஆம், மிகவும் சிறிய அளவில் காகிதத்தில் (போஸ்கார்டு) மிகவும் நுணுக்கமாக முகலாயர்களின் போட்ரைட்ஸ், அவர்களின் அமைச்சரவை, அரண்மனை, வாழ்வியலை புகைப்படம் போல பதிந்துவைக்க இந்த முறை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

வார்லி:

அனைவரும் எங்கேயாவது வார்லி ஓவியத்தைப் பார்த்திராமல் இருக்கமுடியாது. இந்தியாவும் மிகவும் தொன்மையான மேற்கு இந்தியாவில் பழங்குடியினர்களால் உருவாக்கப்பட்ட ஒரு ஓவியபாணி இது. மற்ற ஓவியங்கள் பரதநாட்டியம், குச்சுப்புடி என்றால் இதுதான் பறை இசை. ஆம், அனைத்து ஓவிய பாணியிலும் பெரும்பாலும் கடவுள்களை வரைந்திருப்பார்கள். ஆனால் இந்த வார்லி ஓவியம் முழுக்க உழைக்கும் மக்களின் வாழ்வியலை பிரபலிக்கும் முக்கோண, வட்ட வடிவ ஓவியங்கள். இதில் கடவுள் ஓவியங்களை நீங்கள்பார்க்கவே முடியாது மற்றும் மத சடங்குகளையும்தான். இதன் வயது கி.மு. 2500 முற்பட்ட காலம் என்கின்றனர் ஆய்வாளர்கள். மக்கள் மண் வீடுகளில் குடிபெயர்ந்தபோது காவி வண்ணங்களை சுவர்களில் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதில் தனித்துத் தெரிவதற்காகவே அரிசி மாவில் மூங்கிளைக் கொண்டு தங்களில் வாழ்கை முறைகளை ஓவியமாகத் தீட்டியதே இந்த வார்லி ஓவியம்.

தற்போது இந்தியாவில் ஏன் உலகெங்கும் கூட ஆடைகளில், படுக்கை விரிப்புகளில், அலங்காரப் பொருட்களில் வார்லி ஓவியத்தைப் பார்க்கலாம்.

கலம்காரி:

சென்ற வருடத்தில் இருந்து பார்க்கும் இடமெல்லாம் கலம்காரி ஆடைகள் தான். இதன் பூர்விகம் ஆந்திரா. கலம் என்றால் பேனா, காரி என்றால் கலை. பேனாவினால் வரையப்படும் ஓவியங்கள் என்பதே கலம்காரி . மிகவும் தடினமான துணியை பசும்பாலில் ஊறவைத்து பதப்படுத்தி, மூலிகை வண்ணங்களைக் கொண்டு மூங்கில் பேனாவால் வரைந்து வண்ணமடிப்பது இதன் முறை. தொடக்கத்தில் சுல்தான்களின் அரண்மனை திரைச்சீலைகளாக அலங்கரித்த கலம்காரி ஓவியத்துணிகள், தற்போது நமது ஆடைகளாக பரிணாம வளர்ச்சி கண்டிருக்கிறது.

தஞ்சாவூர் ஓவியம்:

தஞ்சையில் நாயக்கர்கள் ஆட்சியில் இருந்தபோது தான் இந்த ஓவியம் பிரசித்தி பெற்றிருக்கிறது, அதன்பின் மராட்டியர்களும் இந்தக்கலையை வளர்த்திருக்கிறார்கள். அவர்கள் காலத்தில், மரத்தாலான சட்டங்களில் துணிகள் சேர்த்து (கேன்வாஸ்) மரப்பிசினில் சுண்ணாம்புப்பொடியைக் கலந்து, அதில் விலையுயர்ந்த கற்களைப் பதித்து, தங்கத்தகடுகள் மூலாம் பூசப்பட்டுத் தகதக்கும் இந்த தஞ்சாவூர் ஓவியம், தற்போது பல முறைகளில் உருவாக்கப்படுகிறது. மற்ற ஓவியங்களைப் போலில்லாமல் மரச்சட்டங்கள், தகடுகள் என ஒரு மிக்ஸட் மீடியமாக இருப்பது இதன் சிறப்பு. மன்னர்களின் அறையை அலங்கரிக்கும் விலையுயர்ந்த ஓவியமாக இருந்திருக்ககூடும்.

 

NEXT STORY