பெண்களுக்கு வாகன மானியத் திட்டம், இன்று முதல் விண்ணப்பம் - யார், எங்கு, எப்படி விண்ணப்பிக்கலாம்?

ஹெல்த் & லைஃப்ஸ்டைல்
விபீஷிகா
விபீஷிகா | Principal Correspondent
Updated Jun 20, 2019 | 13:39 IST

அம்மா இரு சக்கர வாகன மானியத் திட்டத்தின் முழு விவரம் இங்கே. யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், தகுதி என்ன, என்னென்ன வாகனங்களுக்கு மானியம் அனைத்தும் இங்கே தெரிந்துகொள்ளலாம்.

Amma two wheeler subsidy scheme
Amma two wheeler subsidy scheme  |  Photo Credit: Twitter

தமிழக அரசின் 2018-19ஆம் ஆண்டுக்கான அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ் மானியம் பெற விரும்பும் பெண்கள் இன்று ஜூன் 20-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் ஜூலை 4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்களுக்காக காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே பிப்ரவரி 5-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டம் யாருக்கு?

பல்வேறு நிலைகளில் வேலை பார்க்கும் பெண்களுக்காகத் தொடங்கப்பட்டதுதான் இந்த அம்மா இருசக்கர வாகனத் திட்டம். வேலைக்குச் செல்லும் ஏழைப் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோரின் ஆண்டு வருமானம் ரூ 2,50,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கான முறையான வருமானச் சான்றிதழை சமர்பிக்க வேண்டும். இதன் அடிப்படையில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு இரு சக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கப்படும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:

சுய தொழில் செய்பவர்கள், கடைகள், அரசாங்க நிதி உதவி பெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள்,  அரசு தொழில் திட்டங்களில் வேலை செய்பவர்கள், தொகுப்பூதியம், ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்பவர்கள், வங்கி வழி நடத்துநர்கள், அமைப்பு சாரா, அமைப்பு சார்ந்த தொழிலாளர் அமைப்பில் பதிவு செய்த மகளிர் போன்றோர் விண்ணப்பிக்கலாம்.

இவர்களுக்கு முன்னுரிமை: 

தொலை தூரங்களில் வசிப்பவர்கள், மலைப் பிரதேசங்களில் வசிப்பவர்கள், திருநங்கைகள், குடும்பத் தலைவியாக இருப்பவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர், 35 வயதுக்கும் மேல் திருமணம் ஆகாதவர்கள், ஆதிதிராவிடர்/பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

எந்த வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படும்?

ஆட்டோ கியர்/ கியர் லெஸ் வாகனங்களாக இருக்க வேண்டும். 2018-ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட வாகனமாக இருக்க வேண்டும். 125 சிசிக்கு மிகாமல் மோட்டார் வாகனச் சட்டம் 1988 -கீழ் பதிவு செய்யக்கூடிய வாகனமாக இருக்க வேண்டும். சொந்த முதலீடு அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் வங்கிக்கடன் பெற்றோ இருசக்கர வாகனத்தை வாங்க வேண்டும். மேலும் இவர்கள் ரெட்ரோ ஃபில்டர் வண்டிகளை வாங்கினால் கூடுதல் மானியம் வழங்கப்படும். வண்டி வாங்கி 45 நாட்களில் ஆர்சி புக்குடன் சமர்ப்பிக்க வேண்டும். மானியத்தொகை பெண்களின் வங்கியில் சேர்க்கப்படும்.

மானியம் எவ்வளவு? 

வாகனத் தொகையில் 50% ரூபாயோ அல்லது ரூ 25000 வழங்கப்படும். இவற்றில் எது குறைந்த தொகையோ அது மானியமாக வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ 31, 250 பணமோ அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வாகனத்தின் தொகையில் இருந்து 50% எது குறைவான தொகையோ அது மானியமாக வழங்கப்படும். 

தகுதி:

விண்ணப்பிக்கும் பெண்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ 2,50,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும். இரு சக்கர வாகனம் ஓட்டுவதற்கான லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும். 

தேவையான ஆவணம், விண்ணப்பங்கள் கிடைக்குமிடம்:

இருப்பிடச் சான்றிதழ் அவசியம். வயதுக்கு பிறப்புச் சான்றிதழ் அல்லது பள்ளி மாற்றுச் சான்றிதழ் அல்லது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ். ட்ரைவிங் லைசன்ஸ், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள், மாற்றுத் திறனாளி என்றால் அதற்கான சான்றிதழ், பணியில் இருப்பதற்கான சான்றிதழ், ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ், வாகனம் வாங்குவதற்கான கொட்டேஷன் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி, பேருராட்சி அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும். 

NEXT STORY
பெண்களுக்கு வாகன மானியத் திட்டம், இன்று முதல் விண்ணப்பம் - யார், எங்கு, எப்படி விண்ணப்பிக்கலாம்? Description: அம்மா இரு சக்கர வாகன மானியத் திட்டத்தின் முழு விவரம் இங்கே. யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், தகுதி என்ன, என்னென்ன வாகனங்களுக்கு மானியம் அனைத்தும் இங்கே தெரிந்துகொள்ளலாம்.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola