மன அழுத்தம் என்பது தற்போது மிகவும் பொதுவான ஒரு குறைபாடாக மாறிவிட்டது. உடலில் ஏற்படும் குறைபாடுகளை கவனிக்கும் பலரும், மன அழுத்தத்தை குணப்படுத்துவதற்கு உரிய கவனம் செலுத்துவதில்லை. உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு வெளியிட்ட தகவலின் படி மன அழுத்ததத்தில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் பட்டியலில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. 2005 ஆண்டில் இருந்து 2015 ஆண்டு வரை மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 18 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஒருவர் சில நேரங்களில் வருத்தமாக காணப்படுவதும், மனச்சோர்வுடன் இருப்பதும் இயல்பு தான். ஆனால் எப்போதும் அதே போல இருந்தால் அது மிகவும் ஆபத்தான ஒன்று. பைபோலார் டிசார்டர், சைக்ளோதிமியா, டிஸ்தீமியா என பல வகை மன அழுத்தங்கள் உண்டு. கவலையாக உணருவது, எப்போதும் கோவமாகவே இருப்பது, தூக்கமின்மை ஆகியவை மன அழுத்தத்திற்கான அறிகுறிகள். இதில் இருந்து விடுபட உடனே மருத்துவரை சென்று சந்திப்பது உகந்தது. இருப்பினும் சிலவற்றை பின்பற்றுவதன் மூலம் மன அழுத்ததத்தில் இருந்து நாமாகவே விடுபடலாம்
உடற்பயிற்சி:
உடற்பயிற்சி செய்வது நம்மை ஆரோக்கியதுடனும் புத்துணர்ச்சியுடனும் இருக்க செய்யும். ஒரு வாரத்தில் 3-5 முறை 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஹார்மோன்கள் அதிகமாகி மனநிலையை மாற்ற உதவும்.
மது, சிகரெட், போதை பொருட்களை தவிர்த்தல்:
மது, புகை ஆகியவை அந்த நேரத்திற்கு மகிழ்ச்சியை தந்தாலும் அது மன அழுத்தத்தை இன்னும் தீவிர படுத்தும். எனவே அவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது. அதற்கு பதில் க்ரீன் டீயை பருகுவது மனதை நிதானப்படுத்தும்.
நல்ல எண்ணங்கள் உள்ள மனிதர்களுடன் இருப்பது:
தனிமையில் இருப்பதில் இருந்து விடுபட்டு நல்ல எண்ணங்கள் உள்ள மனிதர்களுடன் இருப்பது மிகவும் நல்லது. நல்ல நண்பர்களுடன் நேரத்தை செலவழித்து, கலகலப்பாக உரையாடுவதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.
இசை:
நல்ல இசையை கேட்பதன் மூலம் அழுத்தம், பதட்டம், கவலை ஆகியவை குறையும். குறிப்பாக துள்ளலான பாடல்களை கேட்பது மனநிலையை மாற்ற உதவும்.
யோகா மற்றும் தியானம்:
மன அழுத்ததத்தில் இருந்து மீண்டு வர யோகா மற்றும் தியானம் சிறந்த வழிகளாக கருதப்படுகிறது. இவற்றின் மூலம் மனமும் சிந்தனையும் நிதானமாக இருக்கும்.
மசாஜ்:
உடல்நிலையில் மனநிலையும் ஒன்றோடு ஒன்று இணைந்தது. எனவே மசாஜ் மூலம் மன அழுத்தம் கணிசமாக குறையும்
இது தவிர நல்ல உறக்கமும், ஆரோக்கியமான உணவு முறைகளும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும்.
பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட பரிந்துரைகள் அனைத்தும் பொது பயன்பாட்டிற்கானவை. அவை யாவும் மருத்துவ ஆலோசனையாக கருதக் கூடாது.