புதுடெல்லி: ஊபரில் பயணிப்பவர்களுக்கு விபத்து ஏற்படும் பட்சத்தில் காப்பீடு வழங்க அந்நிறுவனம் முடிவுசெய்துள்ளது.
இந்தியாவில் பயன்படுத்தப்படும் பிரதான டாக்சி சேவையில் ஒன்று ஊபர். இந்தியாவில் கிட்டத்தட்ட 40 நகரங்களுக்கும் மேல் ஊபர் இயங்கி வருகிறது. இதில் கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன சேவைகள் உண்டு. இந்நிலையில் இனி ஊபரில் பயணிப்பவர்களுக்கு விபத்து ஏற்பட்டால் காப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழப்போ, ஊனமே ஏற்பட்டால் ரூபாய் 5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும். விபத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் ரூபாய் 2 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும். இதுதவிர ரூபாய் 50,000 வரை ஓ.பி.டி (OPD-Out Patient Department) காப்பீடும் வழங்கப்படும்.
ஊபர் நிறுவனம் காரில் பயணிப்பவர்களுக்கு காப்பீடு வழங்க பாரதி ஆக்ஸா நிறுவனத்தோடும், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு காப்பீடு வழங்க டாடா எ
ஏ.ஐ.ஜி நிறுவனத்தோடும் கைகோர்த்துள்ளது. ஊபர் நிறுவனம் ஓட்டுனர்களுக்கு காப்பீடு வழங்கிவந்த நிலையில், தற்போது பயனாளிகளுக்கு வழங்குகிறது. ஊபரின் போட்டி நிறுவனமான ஓலாவும் இதே போல காப்பீடு வழங்கிவருகிறது.
பயனாளிகள் ஊபர் ஆப்பில் பாஸ்ட் ட்ரிப்ஸ் (Past Trips) பிரிவுக்கு சென்று, விபத்து குறித்து தெரிவிக்கலாம். அதனை தொடர்ந்து ஊபரின் பயனாளிகள் சேவை குழு, காப்பீடு அதிகாரிகளோடு ஒருங்கிணைந்து விரைவில் தகுந்த காப்பீடு வழங்க உதுவுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.