ஓலா, ஊபர் நிறுவனங்கள் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் அல்ல: மாருதி சுசுகி!

தொழில்நுட்பம்
Updated Sep 12, 2019 | 19:58 IST | Times Now

நிர்மலா சீதாராமன் மக்கள் தற்போது வாகனங்களை வாங்குவதை விட ஓலா, ஊபர் ஆகியவற்றை பயன்படுத்துவதால் ஆட்டோமொபைல் துறை சரிவை சந்தித்து வருவதாக கூறிய நிலையில் மாருதி சுசுகி நிறுவனம் அவரது கருத்துக்கு முரண்பட்டுள்ளது.

ஓலா, ஊபர் நிறுவனங்கள் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் அல்ல-மாருதி சுசுகி, Ola & Uber Not Big Factor for Current Slowdown says Maruti Suzuki
ஓலா, ஊபர் நிறுவனங்கள் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் அல்ல-மாருதி சுசுகி  |  Photo Credit: Twitter

ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சிக்கு ஓலா, ஊபர் நிறுவனங்கள் முக்கிய காரணமல்ல என்று மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது ஆட்டோமொபைல் துறை பெரும் சரிவை சந்தித்து வருகிறது. பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது ஆலைகளில் உற்பத்தியை நிறுத்தி வருகிறது. மேலும் ஊழியர்கள் பலர் தங்கள் வேலைகளை இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்கள் தற்போது வாகனங்களை வாங்குவதை விட ஓலா, ஊபர் மற்றும் மெட்ரோ ரயில் ஆகியவற்றை பயன்படுத்துவதால் ஆட்டோ மொபைல் துறையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் மக்கள் தற்போது வாகனம் வாங்கும் மனநிலையில் இருந்து மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவரது கருத்து தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போது மாருதி சுசுகி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சிக்கு ஓலா, ஊபர் நிறுவனங்கள் முக்கிய காரணமல்ல என்று தெரிவித்துள்ளார். மக்கள் வாகனம் வாங்கும் மனநிலையில் இருந்து மாறவில்லை என்றும் சிலர் அலுவலகத்திற்கு செல்ல ஓலா, ஊபர் ஆகியவற்றை பயன்படுத்தினாலும் வார இறுதியில் குடும்பத்துடன் வெளியில் செல்ல கார்களை பயன்படுத்துகின்றனர் என்றும் கூறியுள்ளார். ஓலா, ஊபர் ஆகியவை கடந்த 6-7 ஆண்டுகளாக உள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக மட்டுமே ஆட்டோமொபைல் துறை பெரும் சரிவை சந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் பணப்புழக்க நெருக்கடியாலும் வரி, இன்சூரன்ஸ் ஏற்றதினால் கார் விலை உயர்த்துள்ளதாலும் வாகன விற்பனை குறைந்துள்ளதாக தெரிவித்தார்.     

ஓலா, ஊபர் ஆகியவற்றை பயன்படுத்துவதால் ஆட்டோமொபைல் துறை சரிவை சந்தித்து வருவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய நிலையில் மாருதி சுசுகி நிறுவனம் அவரது கருத்துக்கு முரண்பட்டுள்ளது. இருப்பினும் ஆட்டோமொபைல் துறை சரிவால் உற்பத்தி நிறுத்தப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. மாருதி சுசுகி நிறுவனம் குருகிராம், மனிசாரில் உள்ள ஆலையில் இம்மாதம் 2 நாட்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளது. அஷோக் லேலண்ட் நிறுவனமும் தங்கள் தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்தியுள்ளனர்.              

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...