கூகுள் இன்று தனது 21-வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. 27 செப்டம்பர் 1998-ல் அன்றைய ஆராய்ச்சி மாணவர்களாக இருந்த லாறி பேஜ் மற்றும் சர்ஜேய் பிரின் ஆகியோரால் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் விடுதியில் சோதனை முறையில் துவங்கப்பட்ட கூகுள், இன்று உலகின் மிகப்பெரும் தொழில் நிறுவனமாக பரிணமித்துள்ளது.
தனது 21-வது பிறந்தநாளை முன்னிட்டு, பழைய கணினியில் கூகுள் இணையதளம் திறந்திருப்பது போன்ற புகைப்படத்தை டூடுளாக வெளியிட்டுள்ளது கூகுள். கூகுள் துவங்கப்பட்ட தினமான 27 செப்டம்பர் 1998 என்ற தேதி அப்புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறிய முயற்சியாக தொடங்கிய கூகுள் இன்று பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. ஜிமெய்ல், கூகுள் டாக்ஸ், கூகுள் டிரைவ், கூகுள் வாய்ஸ், கூகுள் குரோம் உள்ளிட்ட சேவைகளை வழங்குவதுடன் யூடியூப் உள்ளிட்ட இணையதளங்களை இயக்கி வருகிறது கூகுள் நிறுவனம். அது மட்டுமின்றி, ஸ்மார்ட்போன்களுக்கான ஆண்ட்ராய்ட் இயங்குதள சேவையை வழங்கி வரும் கூகுள், சொந்தமாக நெக்சஸ் ஸ்மார்ட்போன்களை தயாரித்தும் வருகிறது.
வரும் காலங்களில், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பல புதிய கண்டுபிடிப்புகளையும் கூகுள் நிறுவனம் உருவாக்க திட்டமிட்டுள்ளது. அந்த அடிப்படையில் ஓட்டுநர் அல்லாது பயனிக்கும் தானியங்கி கார்களை கூகுள் நிறுவனம் சோதனை செய்து வருகிறது. விரைவில் இந்த கார்கள் சந்தைக்கு வரும் என எதிர்ப்பார்க்கலாம்.