சென்னை: ’வாட்ஸ் ஆப்’ மூலம் 20 நாடுகளில் உள்ள 1,400 பேரின் போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளனது.
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரிக்கும் ’பெகாசஸ்’ எனும் மென்பொருள் கொண்டு வாட்ஸ் ஆப் செயலி உளவு பார்க்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் இந்தியாவில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பது தெரியவில்லை என்றாலும், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பாதிப்புக்குள்ளாகி இருக்கலாம் என செய்திகள் பரவுகின்றன.
மே 2019 வரை இரண்டு வார காலத்திற்கு தங்களது போன் உளவு பார்க்கப்பட்டது என பாதிப்புக்குள்ளானதாக கருதப்படுவோருக்கு வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாக வாட்ஸ் ஆப் செயலியின் உரிமையாளரான ஃபேஸ்புக் நிறுவனம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் தனது அறிக்கையில் மேலும் கூறியதாவது: “மே 2019-ல் அதிநவீன சைபர் தாக்குதல் ஒன்றை தடுத்தோம். வீடியோ அழைப்புகள் மூலம் வாட்ஸ் ஆப் பயனாளிகளின் போன்களுக்கு மால்வேர் அனுப்பப்பட்டது. உடனடியாக உரிய பாதுகாப்பு அம்சங்களை இணைத்து வாட்ஸ்ஆப் செயலியின் புதிய பதிப்பை வெளியிட்டோம். வாட்ஸ் ஆப் பயனாளிகளை பாதுகாக்க மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பாதிப்புக்குள்ளானதாக கருதப்படும் சுமார் 1,400 பயனாளிகளுக்கு சிறப்பு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளோம்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.