பூமியின் சுற்றுவட்டப் பாதையைக் கடந்தது சந்திரயான் 2; நிலவை நோக்கிப் பயணம்

தொழில்நுட்பம்
Updated Aug 14, 2019 | 11:05 IST | Times Now

‘டிராண்ஸ் லூனார் இன்சர்ஷன்’ எனப்படும் முக்கிய நகர்வு மேற்கொள்ளப்பட்டு தற்போது நிலவை நோக்கிய பாதையில் சந்திரயான் 2 விண்கலம் சென்று கொண்டிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Chandrayaan 2
சந்திரயான் 2  |  Photo Credit: Twitter

பெங்களூரு: விண்ணில் செலுத்தப்பட்ட  சந்திரயான் 2 விண்கலம் 23 நாட்களுக்கு பிறகு புதன்கிழமை அதிகாலை 2:21 மணிக்கு இந்தியாவின் பூமியின் சுற்றுவட்டப் பாதையைக் கடந்ததுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. தற்போது, நிலவின் சுற்றுவட்டப் பாதையை நோக்கி விண்கலம் செலுத்தப்பட்டு இருக்கிறது.

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டிருக்கும் இஸ்ரோ என்றழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், ‘டிராண்ஸ் லூனார் இன்சர்ஷன்’ எனப்படும் முக்கிய நகர்வு மேற்கொள்ளப்பட்டு தற்போது நிலவை நோக்கிய பாதையில் சந்திரயான் 2 விண்கலம் சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. ஆகஸ்டு 20 ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடையவிருக்கும் சந்திரயான் 2 விண்கலம், செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவில் தரையிரங்க உள்ளது.

‘இன்று (ஆகஸ்டு 14, 2019), ‘டிராண்ஸ் லூனார் இன்சர்ஷன்’ நகர்வுக்குப் பிறகு சந்திரயான் 2 பூமியின் சுற்றுவட்டப் பாதையைக் கடந்து நிலவை நோக்கி நகரும்,” என்று தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இஸ்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.

 

 

ஜூலை 23 முதல் ஆகஸ்டு 6 வரை படிப்படியாக ஐந்து முறை பூமியை விண்கலம் சுற்றுவரும் பாதை உயர்த்தப்பட்டது. பெங்களூருவிலிருந்து விண்கலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. விண்ணில் செலுத்தப்பட்ட ஜூலை 22 ஆம் தேதி முதல் சந்திரயான் 2 விண்கலம் சரியான முறையில் செயல்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஆகஸ்டு 20 ஆம் தேதி நிலவை நெருங்கிய பிறகு விண்கலத்தின் திரவ எஞ்சின் துவங்கப்பட்டு நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் செலுத்தப்படும். இதனைத் தொடர்ந்து நான்கு நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு, நிலவின் துருவங்களில் இருந்து 100 கி.மீ. உயரத்தில், நிலவின் சுற்றுவட்டப் பாதையில் விண்கலம் பொறுத்தப்படும் என இஸ்ரோ கூறியுள்ளது.

குறைந்த செலவில் மேற்கொள்ளப்பட்ட இத்திட்டம் ஜூலை 22 ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி, மார்க் 3 - எம் 1, எனப்படும் இஸ்ரோவின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. இத்திட்டம் வெற்றியடைந்தால் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தப்படியாக நிலவில் விண்கலத்தை தரையிரக்கிய நான்காவது நாடு என்கிற பெருமையை இந்தியா அடையும்.

நிலவின் அமைப்பு, கனிமவளம், வேதியியல், வெப்பத்தன்மை, வளிமண்டலம் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து நிலவின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்த புரிதலை அதிகரிக்க சந்திரயான் 2 திட்டம் உதவும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

NEXT STORY
loadingLoading...
loadingLoading...
loadingLoading...