தொடர் சரிவு... மீண்டும் வேலையில்லா நாட்களை அறிவித்தது அசோக் லேலண்ட்

தொழில்நுட்பம்
Updated Sep 26, 2019 | 22:06 IST | Times Now

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக அசோக் லேலண்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு விடுமுறை மற்றும் வேலையில்லா நாட்களை அறிவித்து வருகிறது.

Ashok Leyland declares 5-day holiday
அசோக் லேலண்ட்  |  Photo Credit: Twitter

சென்னை: ஆட்டோ மொபைல் துறைகளின் தொடர் சரிவு காரணமாக, மேலும் 5 நாட்களுக்கு வேலையில்லா நாட்களாக ஊழியர்களுக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை காரணமாக வாகன உற்பத்தி துறை கடும் சரிவை சந்தித்து வருகிறது. பொருளாதார சரிவில் இருந்து இந்தியாவை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு துறை சார்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு சில அறிவிப்புகளையும் வெளியிட்டார். ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியை சரிசெய்யவும் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே சென்னை எண்ணூரில் செயல்பட்டு வரும் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக அசோக் லேலண்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு விடுமுறை மற்றும் வேலையில்லா நாட்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் மேலும் 5 நாட்கள் ஊழியர்களுக்கு வேலை இல்லா நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Ashok Leyland statement

இதுதொடர்பாக அசோக் லேலண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  "வரும் 28ஆம் தேதி, அக்டோபர் 1,8,9 ஆகிய தேதிகளில் நிறுவனத்தில் வேலைகள் நடைபெறாது. அத்துடன் 30 ஆம் தேதி 6-வது வேலை இல்லா நாள் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த நாட்களில் ஊழியர்கள் யாரும் நிறுவனத்திற்கு வரவேண்டாம். அறிவிக்கப்பட்டுள்ள வேலை இல்லா நாட்களில் ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியம் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை தொடர்வதால் நிறுவனத்தின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த மாதம் 12 நாட்கள் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் வேலைகள் நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

NEXT STORY