காதல் விவகாரம்.. இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிவிட்டு ரயில் முன் பாய்ந்த இளைஞர்

குற்றம்
Updated Jun 15, 2019 | 11:47 IST | Mirror Now

கடந்த 2016-ம் ஆண்டு சுவாதி என்ற இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தற்போது சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் அதேபோல் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Young woman attacked in Chetpet railway station in Chennai
Young woman attacked in Chetpet railway station in Chennai  |  Photo Credit: Getty Images

சென்னை: காதல் தகராறில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பெண்கள் விடுதியில் தங்கி கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றி வருபவர் தேன்மொழி. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இவர் நேற்று பணியை முடித்த பின்னர் இரவு 8 மணியளவில் சேத்துப்பட்டு ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த சுரேந்தர் என்கிற இளைஞர் தேன்மொழியிடம் பேச முயற்சி செய்துள்ளார். ஆனால், அவரிடம் பேச மறுத்துள்ளார் தேன்மொழி. பின்னர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த சுரேந்தர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால்  திடீரென தேன்மொழியை சரமாரியாக வெட்டினார். இதில் தேன்மொழியின் இடது தாடையிலும், இடது கை சுண்டுவிரலிலும் வெட்டுப்பட்டு ரத்தம் கொட்டியது. அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த பயணிகள் அருகே ஓடிவந்து தேன்மொழியை மீட்டனர். இதற்குள் தாம்பரம் - கடற்கரை மார்க்கம் செல்லும் மின்சார ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார் சுரேந்தர். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இருவரையும் மீட்ட அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த தேன்மொழி கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலும் சுரேந்தர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக சேத்துப்பட்டு போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து முதல் கட்ட விசாரணை நடத்திய போலீசார் கூறுகையில்,  இருவரும் காதலித்து வந்துள்ளனர். சுரேந்திரன் காதலை பெற்றோரிடம் சொல்லி திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார். ஆனால், தேன்மொழி வீட்டில் சம்மதிக்க மறுத்துவிட்டனர். இதனால் தேன்மொழி, சுரேந்திரனிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இந்த ஆத்திரத்தில் சுரேந்தர் தேன்மொழியை அரிவாளால் வெட்டியுள்ளார் எனத் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு பரபரப்பான நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐடி ஊழியர் சுவாதி என்ற இளம்பெண் வெட்டி கொலை செய்யப்பட்டார். தற்போது அதேபோல் சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது சென்னையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

NEXT STORY
காதல் விவகாரம்.. இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிவிட்டு ரயில் முன் பாய்ந்த இளைஞர் Description: கடந்த 2016-ம் ஆண்டு சுவாதி என்ற இளம்பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தற்போது சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் அதேபோல் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
loadingLoading...
loadingLoading...
loadingLoading...
taboola