ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் பெண் தாசில்தாா் ஒருவர் உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம், ஹையாத் நகா் அருகே உள்ள அப்துல்லாபூர்மெட் பகுதியில் தாசில்தார் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் வழக்கம் போல் இன்று பணிகள் நடந்து வந்தன. பெண் தாசில்தாரான விஜயா ரெட்டி அலுவலக பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாா். அப்போது, குவாரெல்லி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தாசில்தாரை அவரது அறையில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தாா். திடீரென சுரேஷ் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து விஜயா ரெட்டி மீது ஊற்றி தீ வைத்தாா். இதில் விஜயா அலறி துடித்தாா். சத்தம் கேட்டு அங்கு பணியில் இருந்த ஊழியா்கள் விஜயாவை காப்பாற்ற முயன்றனா். ஆனால், அதற்குள் விஜயா உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தாா். இதையடுத்து அங்கிருந்து தப்பியோடிய சுரேஷ் ஹையாத் நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசாா், தாசில்தார் விஜயா ரெட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ரங்கா ரெட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து வழக்குப்பதிவு செய்தும் விசாரணையை துவக்கி உள்ளனர். முதல் கட்ட விசாரணையில் நில பிரச்சினை தொடர்பாக எழுந்த விவாதத்தின் இறுதியில் தாசில்தாா் மீது பெட்ரோலை ஊற்றி எரித்ததாக கூறப்படுகிறது. தாசில்தாா் அலுவலகத்தில் பட்டப்பகலில் பெண் தாசில்தார் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மரணம் அடைந்த விஜயா ரெட்டி தில்சுக்நகரில் வசித்து வந்தார். அவரது கணவர் சுபேஷ் ரெட்டி கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வருகிறாா்.