வாணியம்பாடி அரசு மருத்துவமனை கழிவறையில் கிடந்த பெண் சிசுவின் உடல்!

குற்றம்
Updated Sep 16, 2019 | 12:58 IST | Mirror Now

இறந்த சிசு தங்கள் மருத்துவமனையில் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ள தலைமை மருத்துவ அலுவலர் அம்பிகா, சிசிடிவி காட்சிகளை வைத்து ஆராய்ந்தால் உண்மை தெரியவரும் என்றார்.

Newborn girl's body found in Vaniyambadi Government Hospital toilet, வாணியம்பாடி அரசு மருத்துவமனை கழிவறையில் பெண் சிசு உடல் கண்டெடுப்பு
வாணியம்பாடி அரசு மருத்துவமனை கழிவறையில் பெண் சிசு உடல் கண்டெடுப்பு  |  Photo Credit: Representative Image

வேலூர்: வாணியம்பாடி அரசு மருத்துவமனை கழிவறையில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் சிசு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை, புறநோயாளிகள் பிரிவில் உள்ள கழிவறையை சுத்தம் செய்ய பெண் துப்புரவு தொழிலாளி ஒருவர் சென்றுள்ளார். அங்கு கழிவறை குழிக்குள் சிக்கிய நிலையில் பச்சிளம் சிசு ஒன்று கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். செவிலியரின் உதவியுடன் சிசுவை மருத்துவக் கழிவுகள் கொட்டும் பிளாஸ்டிக் கவருக்குள் வைத்து பிரசவ வார்டில் சேர்த்தார்.

தலைமை மருத்துவ அலுவலர் அம்பிகா முன்னிலையில் நடந்த பரிசோதனையில் ஒன்றரை கிலோ எடை கொண்ட பெண் சிசுவானது குறை பிரசவத்தில் பிறந்திருக்கலாம் என்று கண்டறியப்பட்டது.

காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண் யாராவது கழிவறை சென்றபோது குறை பிரசவம் ஆனதா அல்லது வெளியில் இருந்து வந்து யாராவது சிசுவை கழிவறையில் போட்டுவிட்டு சென்றார்களா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இறந்த சிசு தங்கள் மருத்துவமனையில் பிறந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ள தலைமை மருத்துவ அலுவலர் அம்பிகா, சிசிடிவி காட்சிகளை வைத்து ஆராய்ந்தால் உண்மை தெரியவரும் என்றார்.

NEXT STORY