தஞ்சாவூர் அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருவள்ளுவரின் வெண்கலச் சிலையில் சாணி அடித்துச் சென்றுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சனிக்கிழமை பா.ஜ.க கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் படத்தைப் போட்டு ஒரு குறளை பதிவிட்டிருந்தது. அதில் திருவள்ளுவர் காவி உடை அணிந்து கைகளில் திருநீறு பூசி இருப்பது போல இருந்தது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக பலரும் இந்த பதிவுக்கு திருவள்ளுவருக்கு இந்துமத சாயம் போடுவது தவறு, அவர் எந்த மதத்தையும் சேராதவர் என்று எதிர்ப்பு தெரிவித்தும் அவர் மைலாப்பூரில் பிறந்தவர், அவர் ஒரு இந்து என்று ஆதரவாகவும் பேசி வருகிறார்கள்.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் இன்று அதிகாலை 4:30 மணிக்கு மர்ம நபர்கள் வந்துள்ளனர். அங்கு உள்ள திருவள்ளுவர் சிலையில் யாரோ மர்ம நபர்கள், சாணியை வீசிச் சென்றுள்ளனர். இது குறித்து தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். திருவள்ளுவர் சிலைக்கு யார் இப்படி அவமதிப்பு செய்திருப்பார்கள் என்று அப்பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.