மதுரை மாவட்டம் பாலமேட்டில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் சக மாணவரை சாதியின் பெயரை கூறி காயப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பாலமேடு மறவப்பட்டி காலனியை சேர்ந்தவர் அந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர். இவருடன் மாற்று சாதியைச் சேர்ந்த மாணவர் மகா ஈஸ்வரன் அடிக்கடி தகராறு செய்வதாக தெரிகிறது. இருவரும் பாலமேடு அரசு உயர்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்கள். நேற்று இந்த மாணவரின் புத்தகப்பையை எடுத்து முட்புதரில் வீசியுள்ளார் ஈஸ்வரன். தனது புத்தகப்பையை காணாமல் தேடி அலைந்த மாணவர், கடைசியாக முட்புதரில் தனது புத்தகத்தை பார்த்து விட்டு ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டுள்ளார்.
அதற்கு என்னிடம் கேள்வி கேட்கிறாயா என்று ஆத்திரமடைந்த மகா ஈஸ்வரன் ஜாதியின் பெயரை கூறி தனது கையில் வைத்திருந்த பிளேடால் முதுகில் பயங்கரமாக கீறியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அந்த மாணவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் தரையில் பாயில் படுக்கவைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஈஸ்வரனை தற்போது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அலங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.