சென்னை: மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அரியவகை மரப்பல்லிகள், மலைப்பாம்புகள் சென்னை விமான நிலையத்தில் நேற்று பிடிபட்டன.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து புறப்பட்டு சென்னை வரும் பாடிக் ஏர்வேஸ் விமானத்தில் ஏதோவொரு பொருள் கடத்தப்பட்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அதில் சந்தேகத்திற்கு இடமான இருவரின் பையினை சோதனை செய்தபோது அதில் மரப்பல்லிகள், குட்டி மலைப்பாம்புகள் என அரியவகை ஊர்வனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த ஊர்வனங்கள் பையில் இருந்த உடைகளுக்கு நடுவில் மறைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளன. பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது ஒருவர் ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது பர்வேஸ்(36) என்றும் மற்றொருவர் சிவகங்கையை சேர்ந்த முகமது அக்பர்(28) என்றும் தெரியவந்துள்ளது. மலேசியா விமான நிலையத்தில் ஒருவர் இந்த பையை தங்களிடம் கொடுத்ததாகவும், சென்னை விமான நிலையத்தில் ஒருவர் வாங்கிக்கொள்வார் என்று கூறியதாகவும் அவர்கள் விசாரணையில் தெரிவித்தனர்.
2 மலைப்பாம்புகள், 14 மரப்பல்லிகள் என மொத்தம் 16 ஊர்வங்களை பத்திரமாக மீண்டும் மலேசியாவுக்கு அனுப்பும் முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த இருவரை கைது செய்ததோடு இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கும் பணியும் நடந்து வருகிறது.